சூரிச்சில் தமிழ் இளைஞனின் கேவலமான செயல் அம்பலம் : முன்னாள் காதலிக்கு செய்த செயல்.! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
“நான் உன்னை பெற முடியாவிட்டால், நீ உயிருடன் இருக்க மாட்டாய்” எனும் அச்சுறுத்தலுடன் ஆயிரக்கணக்கான செய்திகளை அனுப்பி தனது முன்னாள் துணையை நீண்டகாலம் துன்புறுத்திய 28 வயதான தமிழ் இளைஞர், சுவிட்சர்லாந்தின் Zurich நகரில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில், குறித்த நபர் குறைந்தது 16 மாதங்கள் தொடர்ந்து அந்த பெண்ணை தொந்தரவு செய்துள்ளார். அந்த காலப்பகுதியில் அவர் சுமார் 65,000க்கும் மேற்பட்ட WhatsApp செய்திகளை அனுப்பியதுடன், ஒரே நாளில் 60 வரை தொலைபேசி அழைப்புகளையும் மேற்கொண்டுள்ளார். சில நேரங்களில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒரு செய்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரது செய்திகளில் பலவும் கடுமையான மிரட்டல்களாக இருந்ததாக கூறப்படுகிறது. “நீ எனக்காக இல்லாவிட்டால், உன்னை குத்திக்கொல்லுவேன்” போன்ற அச்சுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், கத்தி மற்றும் கோடாரி போன்ற எமோஜிகளும் இணைக்கப்பட்டிருந்ததாகவும், தன்னுடைய கைகளில் காயம் ஏற்படுத்திய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் அவர் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு மேலாக, அந்த பெண்ணின் பெயரில் TikTok கணக்குகளை உருவாக்கி, அவளின் அடையாளத்தை போலியாக பயன்படுத்தி அவதூறு உள்ளடக்கங்களையும் வெளியிட்டுள்ளார்.

மொத்தத்தில், 16 மாதங்களில் 28,000க்கும் மேற்பட்ட அழைப்புகளும், 65,000க்கும் மேற்பட்ட செய்திகளும் அனுப்பப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக கட்டாயப்படுத்தல், அச்சுறுத்தல், அடையாள திருட்டு மற்றும் சட்டவிரோத தங்குதல் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த Zurich District Court, “இத்தகைய செயல்கள் முற்றிலும் கண்டிக்கத்தக்கவை” என கடுமையாகக் குறிப்பிட்டது. குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவற்றில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், அந்த நபருக்கு 9 மாதங்கள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் இந்த தண்டனைகள் இரண்டும் நிபந்தனை அடிப்படையில் (suspended) வழங்கப்பட்டுள்ளன.
மேலும், அடுத்த 5 ஆண்டுகள் அந்த பெண்ணை தொடர்புகொள்ளவும், அவளது வீட்டுப் பகுதிக்கு அணுகவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரை உடனடியாக நாட்டிலிருந்து வெளியேற்றும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. கட்டாயப்படுத்தல் குற்றம் தானாகவே நாடுகடத்தலுக்கு வழிவகுக்கும் வகையில் இல்லை என்பதால், அவர் சுவிட்சர்லாந்தில் தொடர்ந்தும் தங்க முடியுமா என்பது, அவர் தாக்கல் செய்ய உள்ள தஞ்சக் கோரிக்கை தொடர்பான மேல்முறையீட்டு தீர்ப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.