சிரியா நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கும் சுவிஸ் – அகதி விண்ணப்பங்களில் மாற்றம்
சிரியாவில் முன்னாள் அதிபர் Bashar al-Assad தலைமையிலான அரசு 2024 டிசம்பர் 8ஆம் தேதி வீழ்ச்சியடைந்ததையடுத்து, அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலைமைகளை சுவிட்சர்லாந்தின் குடியேற்ற விவகாரங்களுக்கான மத்திய செயலகமான State Secretariat for Migration தொடர்ந்து நெருக்கமாக கண்காணித்து வருவதாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலைமையை நேரடியாக மதிப்பீடு செய்யும் நோக்கில், 2025 நவம்பர் மாதத்தில் சிரியாவுக்கும் லெபனானுக்கும் விசாரணை பயணமும் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வுகளின் முடிவுகள் மற்றும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அகதி விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடைமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், இனிமேல் ஒவ்வொரு அகதி விண்ணப்பமும் தனிப்பட்ட முறையில் மறுபரிசீலனை செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது, சிரியாவின் அனைத்து பகுதிகளிலும் பொதுவான வன்முறை நிலைமை தொடரவில்லை என்ற முன்கணிப்பின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை முதற்கட்ட பரிசீலனையில் சுமார் 850 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
அதே நேரத்தில், குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு திருப்பி அனுப்பும் முடிவுகளும் எடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது “சூழ்நிலைகள் சாதகமாக இருந்தால் மட்டுமே” மற்றும் திரும்பிச் செல்லும் நபர்கள் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
எனினும், சிரியாவில் பாதுகாப்பு நிலைமை இன்னும் நிலையானதாக இல்லாததுடன், பொருளாதார மற்றும் மனிதாபிமான சூழ்நிலைகளும் கடினமாகவே உள்ளன என்பதால், இந்த “சாதகமான சூழ்நிலைகள்” பல அகதிகளுக்கு இன்னும் உருவாகவில்லை எனவும் State Secretariat for Migration தெரிவித்துள்ளது.