சூரிச் நகர மையத்தில் கைக்கடிகாரக் கொள்ளை – மொராக்கோ நாட்டவர் கைது
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகர மையப்பகுதியில் (Kreis 1) புதன்கிழமை மாலை இடம்பெற்ற சம்பவத்தில், ஒருவரிடமிருந்து விலையுயர்ந்த கை கடிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளதுடன், இன்னொருவர் தப்பிச் சென்றுள்ளார்.
போலீசார் தெரிவித்ததன்படி, இரவு 8.30 மணிக்கு முன்பாக, Pelikanplatz அருகே இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு நபருடன் பேசத் தொடங்கினர். அந்த நேரத்தில், அவர் Talacker மற்றும் St. Peterstrasse பகுதி அருகே ஒரு காரில் பயணியாக இருந்து இறங்கிக் கொண்டிருந்தார்.
அந்தச் சமயத்தில், இருவரில் ஒருவன் திடீரென அவருடைய கையில் இருந்த விலையுயர்ந்த கடிகாரத்தை பறித்துக் கொண்டு ஓடிவிட்டான். இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் குற்றவாளிகளில் ஒருவரை கால்நடையாகத் துரத்தினார். அப்போது அருகில் இருந்த மற்றொரு பொதுமகனும் அவருக்கு உதவினார். தப்பிச் சென்றவர்களில் ஒருவன் Stockerstrasse பகுதியில் உள்ள ஒரு பின்வீதி வளாகத்தில் ஒளிந்துகொண்டான். ஆனால், துரத்தியவர்கள் அவரைக் கண்டுபிடித்து, போலீசார் வரும்வரை அங்கிருந்தே கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த Stadtpolizei Zürich அந்த நபரை கைது செய்ததுடன், பறிக்கப்பட்ட கடிகாரத்தையும் மீட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மேலதிக விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதேவேளை, அவரது கூட்டாளி இன்னும் தப்பியோடிக்கொண்டிருக்கிறார். போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக சாட்சிகளை தேடி வருகின்றனர்.
© Kapo ZH