சுவிஸ் பயணிகளுக்கு எங்கு பணத்தின் மதிப்பு அதிகம்? புதிய ஆய்வு தகவல்
சுவிட்சர்லாந்தின் வலுவான நாணயமான சுவிஸ் ஃப்ராங்க், வெளிநாடுகளில் விடுமுறை திட்டமிடும் பயணிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. இதனால், பல நாடுகளில் சுவிஸ் பயணிகள் தங்கள் பணத்திற்கு அதிக மதிப்பைப் பெறுகின்றனர்.
நிதி சேவை வழங்கும் Wise நிறுவனம் மேற்கொண்ட புதிய ஆய்வில், யூரோ மண்டலம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றைத் தவிர்த்து, சுவிஸ் ஃப்ராங்க் அதிக மதிப்புடன் மாற்றப்படும் நாடுகள் எவை என்பதைக் கணக்கிட்டுள்ளது.
இந்த பட்டியலில் துருக்கி முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, அங்கு சுவிஸ் ஃப்ராங்கின் மதிப்பு சுமார் 28 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், சுவிஸ் பயணிகளுக்கு துருக்கி மிகவும் மலிவான மற்றும் ஈர்க்கக்கூடிய சுற்றுலா இடமாக மாறியுள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்தியா (+17%), ஜப்பான் (+14%), ஹாங்காங் மற்றும் சவூதி அரேபியா (+12%), கனடா (+9%) மற்றும் சீனா (+8%) ஆகிய நாடுகளிலும் சுவிஸ் ஃப்ராங்கின் மதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் ஃப்ராங்கின் வலிமை காரணமாக, வெளிநாட்டு பயணச் செலவுகளை குறைத்து அதிக அனுபவங்களை பெற முடியும் என்பதால், சுவிட்சர்லாந்து பயணிகள் இவ்வாறான நாடுகளை அதிகம் தேர்வு செய்வார்கள் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.