சுவிட்சர்லாந்தில் உள்ள குடிநீர் ஏன் உலகிலேயே சிறந்தது தெரியுமா.? மக்கள் ஒரு புதிய நாட்டிற்குச் செல்லும்போது, தண்ணீரின் தரத்தை சரிபார்ப்பது அரிதாகவே இருக்கிறது.
சுவிட்சர்லாந்தில் வருகின்ற தண்ணீரைப்பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா..? எங்கே இருந்து வருகிறது.? சுத்தமானதா இல்லையா..? எப்படி வருகிறது என்பது பற்றியெல்லாம் அதிகம் சிந்தித்து இருக்கமாட்டீர்கள்.
இவ்வாறு சிந்திக்காமல் நம்மில் பலர் சுத்தமான நீரை வீண் விரயம் செய்வதோடு அதை சாதாரணமாகவே எடுத்துக்கொள்ளுகிறோம். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகின் சிறந்த தரமான குழாய் தண்ணீரைக் கொண்ட நாடாக சுவிட்சர்லாந்து மீண்டும் மீண்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக சுவிட்சர்லாந்தில் டாய்லெட்டுக்கு பீச்சி அடிக்கும் தண்ணீரைக்கூட குடிக்க முடியும், அந்தளவுக்கு அங்குள்ள தண்ணீர் சுத்தமானது என்கின்ற கருத்து இருக்கின்றது. இவ்வாறான தண்ணீர் பற்றிய, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் இங்கே.
சுவிஸ் தண்ணீர் எங்கிருந்து வருகிறது?
சுவிட்சர்லாந்தில் இருக்ககூடிய நீரோடைகள், ஆறுகள், பனிப்பாறைகள் மற்றும் 1,500 க்கும் மேற்பட்ட ஏரிகள் முழு மக்களுக்கும் தண்ணீரை வழங்குகின்றன.
80 சதவீத நீர், இயற்கை நீரூற்றுகள் மற்றும் நிலத்தடி நீரிலிருந்து வருகிறது, மீதமுள்ளவை ஏரிகளிலிருந்து எடுக்கப்படுகின்றன. அப்படியானால் அவற்றில் இருந்து கிடைக்கும் நீர் எப்படி எப்போதும் சுத்தமாக இருக்கும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.
இல்லை, உண்மையில், 50 ஆண்டுகளுக்கு முன்பு அது அருவருப்பான சுத்தமற்ற நீராகவே காணப்பட்டது. சுவிட்சர்லாந்து ஆரம்பத்தில் செல்வச்செழிப்பான நாடாக இருக்கவில்லை. அது போல அதன் நீர்நிலைகளும் செழிப்பாக சுத்தமாக இருந்ததில்லை என்பதே உண்மை.
“1960களின் நடுப்பகுதியில், 100 சுவிஸ் குடும்பங்களில் 14 மட்டுமே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் இணைக்கப்பட்டன. பல இடங்களில், சுவிஸ் நதிகளில் நுரை மிதந்தது, மேலும் ஏரிகள் பாசிகளால் மூடப்பட்டிருந்தன” என்று சூரிச் பல்கலைக்கழக விஞ்ஞானி எழுதிய ஒரு கட்டுரை கூறுகிறது.
விவசாயத்திற்கு பயன்படுத்தும் அதிக உரம் மற்றும் வீடுகளில் பயன்படுத்தும் சவர்க்காரம் போன்றவன்றின் பயன்பாடுகளால் வீட்டு கழிவு நீர் ஆறுகளுக்கு வடிகட்டாமல் எடுத்து செல்லப்படுவதால் அடிக்கடி நுரை போன்று நிரம்பியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
1980 ம் ஆண்டு காலப்பகுதி வரை பேர்ன் நகரத்தில் கழிவறைகள் உட்பட வீட்டுக் கழிவுநீர் வெளியேற்றப்படுவதற்கு முன்பு தோராயமாக வடிகட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அப்படியானால் இப்போதிருக்கும் நிலமைகள் எப்படி..? எவ்வாறு மாறியது.?
மாற்றம் ஒரே இரவில் நிகழவில்லை, ஆனால் பெரும்பாலும் பயனுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் காரணமாக படிப்படியாக மாற்றம் பெற்றது.
“இன்று, 97 சதவீத வீடுகள் கழிவுநீர், சுத்திகரிப்பு நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை மக்கள் குடியிருப்பு இல்லாத தொலைதூர பகுதிகளில் அனுப்படுகின்றன.
“கூடுதலாக, தொழில்துறை ஆலைகளில் இப்போது சிறந்த வடிகட்டிகள் உள்ளன மற்றும் விவசாயிகள் உரங்களைப் பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். மேலும் சட்டங்கள் கடுமையாகிவிட்டன: எடுத்துக்காட்டாக, சவர்க்காரங்களில் பாஸ்பேட் எனப்படும் கெமிக்கல் தடை செய்யப்பட்டுள்ளன.”
தண்ணீரையும் சுத்திகரிப்பதில் அறிவியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. பல்வேறு நச்சு கூறுகளை அளவிடுவதற்கான முறைகள் அதிநவீனமாகி, பிற மருந்துகளின் எச்சங்களைக் கண்டறிகின்றன. மேலும், நிலத்தடி நீர் பாதுகாப்பு மண்டலங்களை நிறுவுவதன் மூலம் தண்ணீரை சுத்திகரிக்காமல் அதிக அளவில் விநியோகிக்க முடியும்.
எனவே குழாயில் உள்ள தண்ணீரை நேரடியாக குடிக்க முடியுமா?
அசாதாரண சூழ்நிலைகளைத் தவிர, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காமல் ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள ஒவ்வொரு குழாயிலிருந்தும் சுவிட்சர்லாந்தின் தண்ணீரை குடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
உண்மையில், சுவிட்சர்லாந்தில் உள்ள குழாய் நீர் பாட்டில் மினரல் வாட்டரை விட சிறந்த சுற்றுச்சூழல் சமநிலையைக் கொண்டுள்ளது என்று மத்திய உணவு பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.