ஸ்மார்ட்போன் பயன்பாடு – சுவிஸ் குடும்பங்களிலும் சமூகத்திலும் அதிகரிக்கும் கவலை
சுவிஸ் காப்பீட்டு நிறுவனம் AXA மற்றும் Sotomo ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து வெளியிட்ட “சைபர் அபாயங்கள்” கண்காணிப்பு அறிக்கை, ஸ்மார்ட்போன் மற்றும் இணையப் பயன்பாடு குறித்த பெற்றோர் கவலைகளை வெளிப்படுத்துகிறது.
ஆறு வயதுக்கு மேற்பட்ட சிறார்களை கொண்ட பெற்றோரில் 55% பேர், வீட்டில் திரை முன் செலவழிக்கும் நேரம் குறித்து அடிக்கடி அல்லது சில சமயங்களில் தகராறு ஏற்படுவதாக கூறினர். பெரும்பாலானோர், குறிப்பிட்ட ஆன்லைன் தளங்களுக்கான அணுகலை கட்டுப்படுத்துதல் அல்லது திரை நேரத்தை வரையறுத்தல் போன்ற விதிமுறைகளை வைத்திருந்தாலும், 51% பேர் அந்த விதிகளை நடைமுறைப்படுத்துவதில் சிரமம் இருப்பதாக தெரிவித்தனர்.

சைபர் புல்லிங் (43%), சைபர் க்ரூமிங் (40%), அத்துடன் பாலியல் உள்ளடக்கம் கொண்ட படங்கள் (37%) குறித்த கவலைகள் அதிகம். 36% பேர், இணையத்தின் மிகை பயன்பாடு குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய சவால் எனக் கருதுகின்றனர். இதனால், குழந்தைகள் ஆஃப்லைன் செயல்பாடுகளில் ஈடுபடாமல் போகும் அபாயமும் உள்ளது.
85% பேர், குழந்தைகள் ஆன்லைன் தளங்களின் அபாயங்களைப் பற்றி போதுமான தகவல் அறியவில்லை எனக் கூறினர். 89% பேர், இதற்கான பொறுப்பு பெற்றோருக்கே என நம்புகின்றனர்; 77% பேர் பள்ளிகளும் பங்கு வகிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். ஆனால், 38% பெற்றோர் தங்கள் குழந்தைகளை சைபர் அபாயங்களிலிருந்து முழுமையாகப் பாதுகாக்க முடியவில்லை என்று நினைக்கின்றனர்.
சில கண்டோன்களில், புதிய கல்வியாண்டில் பள்ளிகளில் மொபைல் பயன்பாட்டுக்கு தடை அமலாகிறது. இதற்கு 81% சுவிஸ் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், 80% பேர் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடக அணுகலைத் தடை செய்ய வேண்டும் எனக் கருதுகின்றனர்.
இந்த ஆய்வு, சுவிஸ் ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் 1706 பேரிடம், 26 பிப்ரவரி முதல் 10 மார்ச் வரை நடத்தப்பட்டது.