செவ்வாய் கிரகத்தில் பழங்கால பெருங்கடல் இருந்ததற்கான புதிய ஆதாரம்
சுவிட்சர்லாந்தின் University of Bern தலைமையிலான சர்வதேச ஆய்வுக் குழு, Mars கிரகத்தில் பழங்கால நதிகளின் தடயங்களை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு, ஒருகாலத்தில் செவ்வாய் கிரகம் ஒரு மிகப் பெரிய பெருங்கடலால் சூழப்பட்டிருந்ததற்கான நேரடி மற்றும் வலுவான ஆதாரமாகக் கருதப்படுகிறது.
பெர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையிலான இந்த ஆய்வுக் குழு, செவ்வாயை ஆய்வு செய்த பல்வேறு விண்கலங்களின் உயர் துல்லியப் படங்களை விரிவாக ஆராய்ந்துள்ளது. அதன் மூலம், பூமியில் நதிகள் கடலில் கலக்கும் இடங்களில் உருவாகும் நதியடித்தளங்களைப் போன்ற புவியியல் அமைப்புகள் செவ்வாயில் இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவுகள் சர்வதேச அறிவியல் இதழான npj Space Exploration இதழில் வெளியிடப்பட்டுள்ளன. ஆய்வின் தலைமை விஞ்ஞானி ஃபிரிட்ஸ் ஷ்லூனெகர் கூறுகையில், “நாங்கள் அடையாளம் கண்ட அமைப்புகள், ஒரு நதி பெருங்கடலில் கலக்கும் பகுதியை தெளிவாகக் காட்டுகின்றன. இது ஊகமல்ல, நேரடி புவியியல் ஆதாரம்” என தெரிவித்துள்ளார்.
தற்போது, இந்த நதியடித்தள அமைப்புகள் காற்றால் உருவான மணற்குன்றுகளால் மூடப்பட்டுள்ளன. இருந்தாலும், அவற்றின் அசல் வடிவமைப்பு இன்னும் தெளிவாகக் காணப்படுவதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ள முடிந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து நதியடித்தளங்களும் ஒரே உயர மட்டத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம், அந்த காலத்தில் இருந்த கடல் மட்டத்தையும், செவ்வாய் கிரகத்தின் கரையோர அமைப்பையும் மீளமைக்க ஆய்வுக் குழுவால் முடிந்துள்ளது. ஆய்வு முடிவுகளின் படி, அந்த பெருங்கடல் பூமியின் ஆர்க்டிக் பெருங்கடலைக் குறைந்தபட்சம் ஒத்த அளவில் இருந்ததுடன், செவ்வாய் கிரகத்தின் வடக்கு அரைகோளமெங்கும் பரவியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்பும் செவ்வாயில் நீர் அல்லது பெருங்கடல் இருந்திருக்கலாம் என பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியிருந்தன. ஆனால் அவை பெரும்பாலும் குறைந்த துல்லியமான தரவுகள் அல்லது மறைமுக அடையாளங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்ததாக ஆய்வாளர்கள் விளக்குகின்றனர். புதிய ஆய்வு, தெளிவான மற்றும் நேரடி புவியியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதே அதன் முக்கியத்துவமாகும்.
இந்த ஆய்வின் கணிப்பின்படி, செவ்வாய் கிரகத்தில் அதிகபட்ச நீர்மட்டம் சுமார் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்துள்ளது. இது, அந்த காலகட்டத்தில் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உருவாகவும் வளரவும் ஏற்ற சூழ்நிலைகள் இருந்திருக்கலாம் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
ஆய்வின் முதன்மை ஆசிரியர் இக்னேஷியஸ் ஆர்கடெஸ்த்யா கூறுகையில், “இன்றைக்கு நாம் செவ்வாயை ஒரு வறண்ட சிவப்பு கிரகமாகப் பார்க்கிறோம். ஆனால் எங்களுடைய ஆய்வு முடிவுகள், அது ஒருகாலத்தில் ‘நீல கிரகமாக’ இருந்ததை தெளிவாக காட்டுகின்றன” என தெரிவித்துள்ளார். நீர் ஒரு கிரகத்தின் வரலாறையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் அளவிற்கு மதிப்புமிக்கது என்பதையும், காலப்போக்கில் அது முற்றிலும் மறைந்து போகக்கூடும் என்பதையும் இந்த ஆய்வு நினைவூட்டுகிறது.
bernerzeitung