சுவிட்சர்லாந்தில் மருத்துவக் காப்பீட்டுக்கான நிர்வாகச் செலவுகள்: 2024-இல் சராசரி 190 ஃப்ராங்குகள்
சுவிட்சர்லாந்தில் 2024 ஆம் ஆண்டில் கட்டாய அடிப்படை மருத்துவக் காப்பீட்டிற்கான நிர்வாகச் செலவுகளாக ஒருவருக்கு சராசரியாக 190 ஃப்ராங்குகள் (மாதத்திற்கு சுமார் 16 ஃப்ராங்குகள்) செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், காப்பீட்டு நிறுவனங்களுக்கு இடையிலான வித்தியாசம் மிகப்பெரியது. சில நிறுவனங்களில் ஒருவருக்கான செலவு 95 ஃப்ராங்காக இருக்க, சிலவற்றில் 513 ஃப்ராங்காக உயர்ந்துள்ளது. இந்தத் தகவல், கூட்டாட்சி பொது சுகாதார அலுவலகத்தின் (UFSP) உத்தியோகப்பூர்வ தரவுகளை அடிப்படையாகக் கொண்டு Moneyland.ch செய்த பகுப்பாய்வில் வெளிப்பட்டது.
மிகவும் திறமையாகச் செயல்படும் நிறுவனங்களில் லூசெர்னர் ஹிண்டர்லாந்து -ஒருவருக்கு 95 ஃப்ராங்குகள், சுமிஸ்வால்டர் க்ராங்கென்காஸ்ஸே – 102 ஃப்ராங்குகள் மற்றும் சோடாலிஸ் -125 ஃப்ராங்குகள் ஆகிய சிறிய காப்பீட்டு நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் பட்டியலின் மறுபுறத்தில், நாட்டின் இரண்டாவது சிறிய காப்பீட்டு நிறுவனமான Birchmeier ஒருவருக்கு 513 ஃப்ராங்குகள் வசூலித்து அதிக செலவுக்குப் பெயர்பெற்றுள்ளது.
பெரிய நிறுவனங்களைப் பார்த்தாலும் வித்தியாசங்கள் கணிசமாகவே உள்ளன. மிகச் செலவுசுருக்கமாக செயல்படும் பெரிய நிறுவனம் CSS, ஒருவருக்கு 154 ஃப்ராங்குகளை மட்டுமே நிர்வாகச் செலவாகக் குறிப்பிட்டுள்ளது. அதேசமயம் Assura 262 ஃப்ராங்குகளைச் செலவிட்டுள்ளது. இவர்களுக்கிடையில் Helsana 178 CHF, KPT, 183 CHF, Swica -200 CHF, Sanitas 207 CHF மற்றும் Visana 212 CHF ஆகியவை உள்ளன.

மொத்தத்தில், 2024-ஆம் ஆண்டில் அடிப்படை மருத்துவக் காப்பீட்டுக்கான நிர்வாகச் செலவுகள் 1.7 பில்லியன் ஃப்ராங்குகளாக உயர்ந்துள்ளது. இது மொத்தக் காப்பீட்டு பிரீமியத்தின் சுமார் 4.5 சதவீதத்துக்கு சமம். “உயர்ந்த பிரீமியங்களுக்கு காரணம் நிர்வாகச் செலவுகள் அல்ல, மருத்துவச் சேவைகளே. அவை மொத்த செலவின் 95 சதவீதத்தை உள்ளடக்கியுள்ளன,” என்று Moneyland.ch நிபுணர் ஃபெலிக்ஸ் ஓஷ்கர் விளக்கமளித்தார்.
1.7 பில்லியன் ஃப்ராங்குகளில் பெரும்பகுதி (சுமார் 1.2 பில்லியன்) ஊழியர்களின் சம்பளங்கள், சமூக நலன்கள் மற்றும் பிற பணியாளர் செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. “பிற நிர்வாகச் செலவுகள்” என்ற பிரிவில் 368 மில்லியன் ஃப்ராங்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைவிட குறைவான தொகை விளம்பரச் செலவுகளுக்கு (73 மில்லியன்), காப்பீட்டு இடைமுகர்களுக்கான கமிஷன்களுக்கு (50 மில்லியன்) மற்றும் சொத்து மதிப்புக் குறைப்பு செலவுகளுக்கு (30 மில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தரவுகள், சுவிட்சர்லாந்தில் மருத்துவக் காப்பீட்டின் சுமை பெரும்பாலும் சிகிச்சைச் செலவுகளால் தீர்மானிக்கப்படுவதை, ஆனால் நிறுவனங்களுக்கு இடையிலான நிர்வாகச் செலவுகளில் உள்ள மாறுபாடு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பொருளாதார சுமையாக மாறக்கூடியதை வெளிக்காட்டுகின்றன.
© KeystoneSDA