சுவிட்சர்லாந்தில் வேலைக்காக அதிகம் பயணம் செய்யப்படும் நகரங்கள் வெளியீடு
சுவிட்சர்லாந்து மத்திய புள்ளிவிவர அலுவலகம் (BFS) வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வு, நாட்டின் நகரங்கள் மற்றும் நகராட்சிகளில் வேலைக்காக தினசரி பயணம் செய்யும் மக்களின் நிலையை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. இந்த ஆய்வில், குறிப்பாக ஒரு நகரத்திற்கு வெளியிலிருந்து வந்து வேலை செய்வோரின் அளவை அளக்கும் “நெட் கம்யூட்டிங் ரேட்” முக்கியமாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில், சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நகரமான Zurich மிக அதிகமான கம்யூட்டர் எண்ணிக்கையுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தினமும் சுமார் 148,000 பேர் வேலைக்காக சூரிச் நகருக்கு வருவது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து Bern, Basel, Geneva மற்றும் Lausanne ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
ஆனால், மக்கள் தொகைக்கு ஒப்பிடும் போது, சிறிய நகராட்சிகள் முன்னிலையில் இருப்பது இந்த ஆய்வின் முக்கியமான கண்டுபிடிப்பாகும். குறிப்பாக பெரிய தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் உள்ள இடங்களில் வெளிநகரங்களில் இருந்து வருபவர்களின் விகிதம் அதிகமாக உள்ளது.

அந்த வகையில், வலைஸ் கன்டோனில் அமைந்துள்ள Visp நகரம் முன்னிலையில் உள்ளது. இங்கு செயல்படும் Lonza மருந்து நிறுவனம் காரணமாக, அதிக அளவில் பணியாளர்கள் வெளியிலிருந்து வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து Kloten நகரம் உள்ளது. இங்கு Zurich Airport அமைந்துள்ளதால், வேலைக்காக தினசரி பயணிகள் அதிகம்.
மேலும், வோட் கன்டோனில் உள்ள Ecublens நகரமும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. இங்கு அமைந்துள்ள École Polytechnique Fédérale de Lausanne (EPFL) காரணமாக மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
இந்த ஆய்வு, சுவிட்சர்லாந்தில் வேலை வாய்ப்புகள் சில முக்கிய நகரங்கள் மற்றும் தொழில்துறை மையங்களில் மையப்படுத்தப்பட்டுள்ளதைத் தெளிவாக காட்டுகிறது. இதனால் தினசரி பயணம் பலரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.