வேலையே செய்யாமல் சுவிட்சர்லாந்தில் வாழலாம் : “Golden Visa” சில தகவல்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேராதவர்கள் சுவிட்சர்லாந்தில் அதிக கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பது உலகறிந்த விடயம்.
என்றாலும், பணம் வருகிறது என்றால், விதிகளை நெகிழ்த்த அந்நாடும் தயாராகவே உள்ளது என்பதை சுவிட்சர்லாந்து வழங்கும் golden visa விலிருந்து அறிந்துகொள்ளலாம்.
சுவிட்சர்லாந்தின் Golden Visa: சில தகவல்கள்
சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்களுக்கெதிராக கடுமையான சட்டங்கள் இருந்தாலும், அந்த சட்டத்திலேயே, பெடரல் வெளிநாட்டவர்கள் சட்டத்தில் 30ஆவது பிரிவு, பணக்காரர்களுக்கு ஆதரவாக ஒரு விதிவிலக்கைக் கொண்டுள்ளது.
அந்த விதியின்படி, ஐரோப்பாவுக்கு வெளியே உள்ள நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தில் வேலையே செய்யாமல் வாழ, வழிவகை செய்கிறது.

ஒரே ஒரு நிபந்தனைதான், அவர்கள் தங்களுக்கான அனைத்துத் தேவைகளையும் சந்திக்கும் அளவுக்கு பணக்காரகளாக இருக்கவேண்டும்! அப்படிப்பட்ட பெரும் பணக்காரர்களுக்கு வழங்கப்படும் விசாதான் தங்க விசா என அழைக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் பணக்காரர்கள் என்பதன் பொருள் என்ன?
அதாவது, வேலையே செய்யாமல், எக்காரணம் கொண்டும் அரசின் உதவியையும் நாடாமல் சுவிட்சர்லாந்தில் வாழ விரும்புவோர், சுவிஸ் அரசுக்கு வரி செலுத்தவேண்டும்.
வரி என்றால் சின்னத் தொகை அல்ல! ஜெனீவாவைப் பொருத்தவரை இந்த வரி, ஆண்டொன்றிற்கு சுமார் 312,522 சுவிஸ் ஃப்ராங்குகள்.
Vaud மாகாணமென்றால் இந்த வரி, 415,000 சுவிஸ் ஃப்ராங்குகள், Valais மாகாணமென்றால் 287,882சுவிஸ் ஃப்ராங்குகள்.
இதுபோக வேறு சில கட்டணங்களும் உண்டு. மனதில் கொள்ள வேண்டிய ஒன்று, பணத்தால் மட்டும் Golden விசாவை வாங்கிவிட முடியாது. “பொது பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு அல்லது சுவிட்சர்லாந்தின் சர்வதேச உறவுகளுக்கு நீங்கள் அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது” என்றும் சட்டம் கூறுகிறது.

கூடுதலாக, சுவிட்சர்லாந்தில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டினரும் – பணக்காரர் மற்றும் ஏழை – கட்டாய சுகாதார காப்பீட்டுத் தொகையை வாங்க வேண்டும்.
கூடவே, நீங்கள் குற்றப்பின்னணி கொண்டவர்களாகவும் இருக்கக்கூடாது. அப்படியென்றால், நீங்கள் சுவிட்சர்லாந்தில் வேலையே செய்யாமல், உங்கள் பணத்தில், சந்தோஷமாக வாழலாம்.
சுவிட்சர்லாந்தில் Golden விசா வைத்திருப்பவர்கள் யார்?
குடியேற்றத்திற்கான மாநில செயலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி ஒவ்வொரு ஆண்டும், சுமார் 40 முதல் 50 பேர் இந்த விசாக்களைப் பெறுகிறார்கள்.
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த சிறப்பு அனுமதியுடன் மொத்தம் 352 வெளிநாட்டினர் சுவிட்சர்லாந்தில் வசித்து வந்தனர். அவர்கள் பெரும்பாலும் ரஷ்யா, சவுதி அரேபியா, அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து வந்துள்ளனர்.
இருப்பினும், குடியேற்றத்திற்கான மாநில செயலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, சிறப்பு அனுமதி பெற்ற வெளிநாட்டவர்களில் சீனாவைச் சேர்ந்தவர்கள் இப்போது அதிக அளவில் உள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் 34 சீனர்கள் Golden Visa மூலம் சுவிட்சர்லாந்தில் குடியேறியுள்ளனர்.
தரவு பாதுகாப்பு சட்டத்தின் காரணமாக இந்த பணக்கார வெளிநாட்டினரின் அடையாளங்களை கன்டோன்கள் வெளியிடுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த கோல்டன் விசா உடையவர்கள் அதிகம் எங்கு வாழ்கிறார்கள் என்று பார்த்தால், அவர்களில் பெரும்பாலோர் ஜெனீவா மாகாணத்தில் வாழ்கின்றனர். அடுத்து டிசினோ, அதைத் தொடர்ந்து வாட், சுக் மற்றும் பெர்ன் மாகாணங்களில் அதிகம் வாழ்கிறார்களாம்.
-தேவா மதன்-