தாய்லாந்தில் கரடிக்காக கையை துண்டித்த சுவிஸ் நபர்.!! சுவிஸ் நபர் ஒருவர் கரடியிடம் சிக்கி தனது கையை தானே துண்டித்த சம்பவம் ஒன்று தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
தாய்லாந்தின் வடக்கு மாகாணமான சியாங்மாயில் உள்ள ஒரு வனவிலங்கு அறக்கட்டளையில் தன்னார்வத் தொண்டு செய்து கொண்டிருந்த போது, கரடி குறித்த நபரது கைகளை கடித்துள்ளது.
அதிலிருந்து தப்பிக்கவே அவர் தனது கையை துண்டித்துள்ளார். 32 வயதான சுவிஸ் நபர் நேற்று ஜனவரி 25 அன்று மாகாணத்தின் சியாங்டாவ் மாவட்டத்தில் உள்ள வனவிலங்கு அறக்கட்டளையில் கூண்டில் இருந்த கரடிக்கு உணவழிப்பதற்காக, ஒரு தட்டில் உணவை வைப்பதற்காக அவர் தனது வலது கையை கூண்டுக்குள் செருகினார்.
அந்தநேரத்தில் உடனடியாக கரடியால் தாக்கப்பட்டார். அவர் தனது கையை திரும்பப் பெற முயன்றார். ஆனால் கரடி அவரை விடவில்லை. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நபர் தனது உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் கத்தியை எடுத்து தனது கையை வெட்டினார்.
அதனை அவதானித்த ஊழியர்கள் உடனடியாக விரைந்து அவருக்கு முதலுதவி அளித்து அவரை சியாங் டாவ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனியார் மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சைக்காக தற்போது குறித்த நபர் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இழந்த கைமூட்டை மீண்டும் இணைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து எந்த தகவலும் இல்லை.
பல தாய்லாந்து நெட்டிசன்கள் சுவிஸ் நபரின் நிலை குறித்து கவலை தெரிவித்தனர். கரடியை காயப்படுத்துவதற்குப் பதிலாக அவரது கையை வெட்டுவதைத் தேர்ந்தெடுத்ததற்காக மற்றவர்கள் அவரது கனிவான மற்றும் தைரியமான இதயத்திற்காக அவரைப் பாராட்டிவருகின்றனர்.