ஜெனீவா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட SWISS விமானம்
சுவிட்சர்லாந்தின் SWISS நிறுவனத்தின் ஜெனீவாவிலிருந்து பிராங்க்பர்ட் நோக்கி சென்ற விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மீண்டும் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. திங்கட்கிழமை காலை இடம்பெற்ற இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Airbus A220 வகையைச் சேர்ந்த இந்த விமானம், ஜெனீவா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பின்னர், கேபினில் வெப்பநிலை அசாதாரணமாக உயர்ந்ததை விமான குழு கவனித்தது. உடனடியாக பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, விமானத்தை மீண்டும் திருப்ப அனுமதி கோரப்பட்டது. சுமார் காலை 10.45 மணியளவில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
தரையிறங்கியவுடன், விமானம் விமான நிலைய அவசர சேவை குழுவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, நேரடியாக ஓடுதளத்திலேயே விரைவான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கேபின் உள்வெப்பம் அதிகரித்தது பொதுவாக குளிரூட்டல் அல்லது காற்றோட்ட அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இருக்கலாம் என ஆரம்ப தகவல்கள் கூறுகின்றன.

சில நிமிடங்களில் விமானம் மீண்டும் தனது நிறுத்துமிடத்திற்கு நகர்த்தப்பட்டது. இருப்பினும், இந்த கோளாறின் துல்லியமான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
இதே Airbus A220 விமானம் கடந்த காலத்திலும் சில தொழில்நுட்ப பிரச்சினைகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 2024 டிசம்பர் 23ஆம் தேதி ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் அவசர தரையிறக்கம் செய்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. அப்போது புக்கரெஸ்ட் முதல் சூரிச்ச் நோக்கி சென்ற விமானத்தில் இன்ஜின் கோளாறு காரணமாக புகை பரவியதால் பயணம் இடைநிறுத்தப்பட்டது. பயணிகள் அவசர வழிகளில் வெளியேற்றப்பட்ட நிலையில், சூரிச்சைச் சேர்ந்த 23 வயதுடைய விமான பணியாளர் ஒருவர் கடுமையான ஆக்சிஜன் குறைபாட்டால் ஒரு வாரம் கழித்து உயிரிழந்தார்.
இந்த அண்மை சம்பவம் மீண்டும் விமான பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.