அபராதம் செலுத்தாதவர்களை சிறையில் அடைக்கும் நடைமுறை குறித்து ஜெனீவாவில் விவாதம்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா (Genève) கன்டோனில் அபராதம் செலுத்தாதவர்களை சிறையில் அடைக்கும் நடைமுறை தற்போது அரசியல் மற்றும் சமூக அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெனீவாவில் உள்ள Champ-Dollon சிறையில் தற்போது சிலர் அபராதத் தொகைகளை செலுத்தாததற்காக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். பொதுப் போக்குவரத்து கட்டணம் தவிர்த்தல், சிறிய அளவிலான போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் அல்லது குறைந்த மதிப்புள்ள திருட்டு போன்ற குற்றங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்களை செலுத்த முடியாதவர்கள் இவ்வாறு சிறையில் அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலைகளை பார்வையிடும் சுயாதீனக் குழு இந்த நடைமுறையை விமர்சித்துள்ளது. குறிப்பாக பொருளாதார சிக்கல்களில் உள்ளவர்களே இந்த சட்ட நடைமுறையால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்று அவர்கள் கூறுகின்றனர். ஒருவரை சிறையில் அடைப்பது கடைசி தீர்வாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தையும் அந்த குழு முன்வைத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஜெனீவா மகா சபை (Grand Council)யில் விவாதம் நடைபெற்றது. ஆனால் சட்டத்தில் மாற்றம் செய்யும் முயற்சிக்கு வலதுசாரி அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் காரணமாக இந்த விஷயத்தில் நடைபெற வேண்டிய வாக்கெடுப்பு அடுத்த சில வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அபராதத்தை செலுத்த முடியாதவர்களுக்கு மாற்று தண்டனைகள் அல்லது சமூக சேவை போன்ற வழிகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து சில அரசியல் தரப்புகளிலும் மனித உரிமை அமைப்புகளிலும் வலுப்பெற்று வருகிறது. அதே நேரத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை கடைப்பிடிக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என மற்றொரு தரப்பு வலியுறுத்தி வருகிறது. இதனால் இந்த விவகாரம் ஜெனீவா அரசியலில் தொடர்ந்து முக்கிய விவாதமாக மாறியுள்ளது. WRS