வோட் கன்டோனில் இளைஞர்களுக்கு Interrail பாஸ் திட்டம்
சுவிட்சர்லாந்தின் Vaud கன்டோனில், 18 வயதை அடையும் இளைஞர்களுக்கு ஐரோப்பா முழுவதும் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கும் Interrail பாஸ் வழங்கும் யோசனைக்கு அரசியல் ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்த திட்டத்தின் செயல்திறனை ஆய்வு செய்ய கன்டோன் பாராளுமன்றம் முடிவு எடுத்துள்ளது.
இந்த முயற்சியின் நோக்கம், இளைஞர்களிடையே ரயில் பயணத்தை ஊக்குவிப்பதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்தும் பழக்கத்தை வளர்ப்பதாகும். குறிப்பாக, விமானப் போக்குவரத்து துறையால் ஏற்படும் அதிகளவான கார்பன் உமிழ்வுகளை குறைக்கும் மாற்று வழியாக ரயில் பயணம் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இடதுசாரி கட்சிகள் மற்றும் பசுமை லிபரல் தரப்பின் ஆதரவுடன் இந்த முன்மொழிவு இந்த வாரம் குறைந்த வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. சில உறுப்பினர்கள், நிலையான போக்குவரத்தை முன்னிறுத்துவது காலத்தின் அவசியம் என்றும், இத்தகைய திட்டங்கள் எதிர்கால தலைமுறைக்கு சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை உருவாக்கும் என்றும் வலியுறுத்தினர்.
இப்போது, இந்த திட்டம் நடைமுறையில் அமல்படுத்தப்படுமா என்பது குறித்து மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், சுவிட்சர்லாந்தின் பிற கன்டோன்களுக்கும் முன்னுதாரணமாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.