சூரிச் பிரதான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை துப்பாக்கிச்சூடு இடம்பெற்று ஒருவர் படுகாயங்களுடன் அம்புலனஸ்சில் கொண்டு செல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. குறித்த செய்தியின் உண்மைத்தன்மை பற்றிய மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக கூறி சுவிட்சர்லாந்தின் செய்திகளை வெளியிட்டுவரும் பிரபல இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் கணக்கு ஒன்றின் ஊடாகவே குறித்த போலியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் குறித்த செய்தியில் குறிப்பிட்டது போல எந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என சூரிச் கண்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உண்மையில் அன்றைய தினம் சூரிச் பிரதான ரயில் நிலையத்தில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இருவருக்கிடையிலான பயங்கரமான மோதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ்சில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய நபரை அங்கிருந்த பொதுமக்களில் சிலர் போலீசார் வரும்வரை தடுத்து வைத்துள்ளனர். சனிக்கிழமை இரவு 9 மணிக்குப் பிறகு, 31 வயதான மொராக்கோ நபர் ஒருவர்இ 88 வயதுடைய சுவிஸ் நபரைத் திடீரெனத் தாக்கியுள்ளார்.
சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் சரியாக தெரியவில்லை. எனினும் இது தொடர்பாக சூரிச் கன்டோனல் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.