ஜெனீவா எல்லைச் சாவடிகள் தற்காலிகமாக மூடப்பட வாய்ப்பு
சுவிட்சர்லாந்தின் Geneva நகரத்திற்கு அருகிலுள்ள பிரான்ஸ் நகரமான Évian-les-Bains பகுதியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி7 (G7) உச்சி மாநாட்டை முன்னிட்டு, ஜெனீவா கன்டோன் நிர்வாகம் எல்லை பாதுகாப்பை கடுமையாக்கும் நடவடிக்கைகளை பரிசீலித்து வருகிறது.
ஜூன் 15 முதல் 17 வரை நடைபெறவுள்ள இந்த சர்வதேச மாநாட்டில் உலகின் முக்கிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். Évian நகரம் ஜெனீவாவிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெனீவா காவல்துறைத் தலைவர் மோனிகா பொன்பான்டி கூறுகையில், தேவையான சூழ்நிலை ஏற்பட்டால் ஜெனீவாவைச் சுற்றியுள்ள 34 எல்லைச் சாவடிகளில் சிலவற்றை தற்காலிகமாக மூடுவதோடு, மீண்டும் கடுமையான எல்லைச் சோதனைகளையும் அமல்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஜி7 மாநாட்டுக்கு எதிராக ஜெனீவாவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி வழங்கலாமா, கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கலாமா அல்லது முழுமையாகத் தடைசெய்யலாமா என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
மேலும், இணையத் தாக்குதல்கள், பொது அமைதிக்கேடு மற்றும் வன்முறை சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள காவல்துறை தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக சுவிட்சர்லாந்தின் பல கன்டோன்களில் இருந்து கூடுதல் பாதுகாப்புப் படையினரும் ஜெனீவாவுக்கு அனுப்பப்பட உள்ளனர்.