பொது இடங்களில் ஆபாச செயலில் ஈடுபட்ட நபருக்கு அபராதம்
சூரிச் நகரைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவர், பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொண்ட போதிலும், சிறைத் தண்டனையிலிருந்து தப்பித்துள்ளார் என்று «லிம்மட்டலர் சைட்டுங்» செய்தித்தாள் தெரிவிக்கிறது.
கடந்த மார்ச் மாதம், இந்த நபர் முதலில் ஒரு எஸ்-பான் ரயிலில் (S-Bhan) பயணியொருவர் முன்னிலையில் தன்னை அநாகரீகமாக அம்பலப்படுத்தினார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒரு பேட்மிண்டன் அரங்கில் ஒரு பெண் பணியாளர் முன்னிலையில்அதே செயலை மீண்டும் செய்தார் .
அதற்கு முன்பு, அவர் ஒரு ஐஸ்டீ ஆர்டர் செய்திருந்தார், பின்னர் திடீரென தனது பேண்ட்டை இறக்கி, அநாகரிகமாக நடந்து கொண்டார். இரு சம்பவங்களையும் சூரிச்-லிம்மட் வழக்கறிஞர் அலுவலகம், வன்மையாக கண்டித்துள்ளது.

குறிப்பாக, பேட்மிண்டன் அரங்கில் நடந்த சம்பவத்தை கடுமையான வழக்காகக் கருதியது. இந்த நபர், மனநலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கான கவனிப்பு மையத்தில் வசிப்பதாக «லிம்மட்டலர் சைட்டுங்» மேலும் தெரிவிக்கிறது.
இதற்கு சில நாட்களுக்கு முன்பு, இவர் நகர மருத்துவமனையான சூரிச் வைட் மருத்துவமனைக்கு தடை இருந்த போதிலும் அங்கு அத்துமீறி நுழைந்தார். இதுவும் தற்போது சட்டரீதியாக கருத்தில் கொள்ளப்பட்டது.
இதன் விளைவாக, 1800 பிராங்குகள் அபராதமாகவும், 800 பிராங்குகள் வழக்கு செலவாகவும், மொத்தம் 2570 பிராங்குகள் செலுத்த உத்தரவிடப்பட்டது. பேட்மிண்டன் அரங்க சம்பவத்திற்குப் பிறகு, இவர் ஏற்கனவே ஒரு நாள் தடுப்புக் காவலில் இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.