பிஸினஸ் கிளாஸ் அனுபவத்துடன் சூரிச்–ஐரோப்பா இரவு பேருந்து சேவை
சுவிட்சர்லாந்தை சேர்ந்த புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனம் (Twilliner) ட்வில்லினர், சூரிசிலிருந்து ஐரோப்பாவின் முக்கிய நகரங்களான ஆம்ஸ்டர்டாம் மற்றும் பார்சிலோனாவுக்கு புதிய இரவு பேருந்து சேவைகளை தொடங்கியுள்ளது. விமான பிஸினஸ் கிளாஸ் அனுபவத்தை நினைவூட்டும் வசதிகளுடன் இந்த சேவைகள் அறிமுகமாகியுள்ளன.
முதல் பாதை சூரிசிலிருந்து புறப்பட்டு பாசல் வழியாகச் சென்று, லக்ஸம்பர்க், பிரஸல்ஸ், ராட்டர்டாம் ஆகிய நகரங்களைத் தாண்டி இறுதியாக ஆம்ஸ்டர்டாமை அடைகிறது. இரண்டாவது பாதை சூரிசிலிருந்து பெர்ன் வழியாகச் சென்று, ஸ்பெயினின் ஜிரோனா நகரத்தைத் தொடர்ந்து பார்சிலோனாவை சென்றடைகிறது.
சாதாரண சர்வதேச பேருந்து சேவைகளிலிருந்து ட்வில்லினர் மாறுபடுவதற்கான முக்கிய காரணம், அதன் உள்புற வசதிகளாகும். பயணிகள் அமர்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நாற்காலிகள், தேவையான போது முழுமையாக படுக்கையாக மாற்றிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் இரவு நேர நீண்ட தூர பயணங்களில் தூக்கம் மற்றும் ஓய்வுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

ஐரோப்பாவில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பயண முறைகள் மீது ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், விமானப் பயணத்திற்கு மாற்றாக வசதியான மற்றும் செலவுக்குறைவான தீர்வாக இந்த இரவு பேருந்து சேவைகள் பார்க்கப்படுகின்றன. சுவிட்சர்லாந்திலிருந்து ஐரோப்பாவின் முக்கிய வணிக மற்றும் சுற்றுலா நகரங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு இது புதிய தேர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© KeystoneSDA