சுவிட்சர்லாந்தில் பத்திரிகையாளர்கள் மீது அதிகரிக்கும் தாக்குதல்: 2024ல் இரண்டு பேரில் ஒருவர் அவமதிப்புக்கு இலக்கு
சுவிட்சர்லாந்தில் செயல்படும் பத்திரிகையாளர்களில் ஏறக்குறைய இரு மூன்றுபேர் 2024ஆம் ஆண்டு தங்கள் பணியின்போது அவமதிப்பான கருத்துகள், விரோத அணுகுமுறைகள் அல்லது மிரட்டல்களுக்கு ஆளாகியுள்ளதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது. அதிலும் 11 சதவீதம் பேர் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக கூறியுள்ளனர்.
இந்த விவரங்கள், சூரிச் பயன்பாட்டு அறிவியல் உயர் கல்வி நிறுவனம் (ZHAW) 2025 பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நடத்திய ஆய்வில் இருந்து கிடைத்தது. மின்னஞ்சல் மற்றும் லிங்க்ட்இன் மூலம் தொடர்பு கொண்ட 6000 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக மேலாளர்களில் 1751 பேர் இறுதியாக பதிலளித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் ஆறு பேரில் நால்வர் அவதூறு கருத்துகள் மற்றும் இழிவான தாக்குதல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர். இதில் 45 சதவீதம் பொதுவாக ஊடகத் துறையையோ அல்லது குறிப்பிட்ட ஊடக நிறுவனங்களையோ குறிவைத்தவையாக இருந்தன. 20 சதவீதத்திலோ குறிப்பாக பத்திரிகையாளர்களின் இனம், பாலினம் ஆகியவற்றை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாலியல் தொல்லைகள் பெரும்பாலும் தகாத வார்த்தை பிரயோகங்களால் நடந்துள்ளன; 81 சதவீதம் வார்த்தை வழி தொல்லைகளாகவும், 19 சதவீதம் உடல் ரீதியான தொல்லைகளாகவும் பதிவாகியுள்ளது. விசாரணை செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களே அதிகமாக குறிவைக்கப்படுகின்றனர். துர்நடப்புகள், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள், தவறான தகவல்களை வெளிச்சம் போடும் பணிகள் காரணமாக அவர்கள் அதிக ஆபத்துக்கு உள்ளாகின்றனர்.

சுவிட்சர்லாந்திலும் ஆன்லைன் மிரட்டல்கள் ஒரு பெரும் சவாலாக உருவாகி வருகின்றன. வெறுப்பு கருத்துகள், சட்ட நடவடிக்கை எடுப்பதாக மிரட்டல் விடுத்தல் போன்றவை மிக அதிகமாக நிகழும் தாக்குதல் முறைகளாகும். ஊடகத் துறையில் பணிபுரிபவர்களில் நால்வரில் ஒருவருக்கு குறைந்தது ஒருமுறை சட்ட மிரட்டல் கிடைத்துள்ளது.
பெரும்பாலான மிரட்டல்கள் டிஜிட்டல் தளங்களிலேயே வருகிறது. 17 சதவீதம் பேர் பணியிடத்தில் கணினி தாக்குதல், பிஷிங் முயற்சிகள், போலியான மின்னஞ்சல்கள் போன்ற தொழில்நுட்ப அடிப்படையிலான மிரட்டல்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதல்கள் பத்திரிகையாளர்களின் மனநலத்துக்கு தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மனஅழுத்தம், மனசோர்வு அதிகரிப்பதாகவும் ஆய்வு எச்சரிக்கிறது. இதனால் அறிவியல் உயர் கல்வி நிறுவனம், ஊடக நிறுவனங்கள் மற்றும் செய்தியாளர் சங்கங்கள் பாதுகாப்பு மற்றும் மனநல ஆதரவு திட்டங்களை அவசரமாக உருவாக்க வேண்டும் என பரிந்துரைக்கிறது. மேலும், இத்தகைய பிரச்சினைகளை தீர்க்கும் பயிற்சிகள் பத்திரிகை கல்வியிலும், தொடர்ச்சியான பயிற்சிகளிலும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
சமூக ஊடக காலத்தில் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் உலகளாவிய அளவில் அதிகரித்து வரும் நிலையில், சுவிட்சர்லாந்தில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு ஊடக சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் முன்வைக்கிறது.
© KeystoneSDA