சுவிட்சர்லாந்தில் மின்சார மற்றும் ஹைப்ரிட் வாகனங்கள் அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக மொத்தமாக பதிவு செய்யப்படும் புதிய கார் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், மின்சார மற்றும் ஹைப்ரிட் வாகனங்களின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வருவதாக புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்து மத்திய புள்ளிவிவர அலுவலகம் (BFS) வெளியிட்ட தகவலின்படி, 2025 ஆம் ஆண்டில் முழுமையாக மின்சார சக்தியில் இயங்கும் கார்கள் பதிவு 15 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதேவேளை, மின்சாரமும் எரிபொருளும் இணைந்து இயங்கும் ஹைப்ரிட் வாகனங்களின் பதிவு 26 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
மின்சார இணைப்பின் மூலம் நேரடியாக மின்சாரம் நிரப்பக்கூடிய வாகனங்கள் தற்போது புதிய வாகன பதிவுகளில் சுமார் 34 சதவீதத்தை பிடித்துள்ளதாக இந்தக் கணக்கில் தெரியவந்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் செலவினக் குறைப்பு போன்ற காரணிகள் மக்களை மின்சார மற்றும் ஹைப்ரிட் வாகனங்களுக்கு திரும்பச் செய்து வருவதாக வாகனத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

பயணிகளுக்கான தனியார் கார் பயன்பாட்டில், ஐரோப்பாவின் பிற நாடுகளை ஒப்பிடும்போது சுவிட்சர்லாந்து இன்னும் பிந்தங்கி உள்ளதாகவும், ஆனால் மின்சார கனரக சரக்கு வாகனங்களின் பயன்பாட்டில் ஐரோப்பாவில் முன்னணி இடத்தை பிடித்துள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கட்டண விலக்கு உள்ளிட்ட அரசு ஊக்குவிப்புகள் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளதாக கருதப்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் நோக்கில் சுவிட்சர்லாந்து அரசு மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக போக்குவரத்து துறை நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.