சுவிஸ் கூட்டாட்சி ரயில்வே நிறுவனத்தின் முட்டாள்தனமான தீர்மானம் : அரசியல்வாதிகள் விமர்சனம்
சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி ரயில்வே நிறுவனம் (SBB) புதிய ரயில் வண்டிகளுக்கான பெரும் ஒப்பந்தத்தை ஜெர்மனியின் சிமென்ஸ் (Siemens) நிறுவனத்துக்கு வழங்கியிருப்பது அரசியல் வட்டாரங்களிலும் ஊடகங்களிலும் கடுமையான விமர்சனத்தை கிளப்பியுள்ளது. சுவிஸ் நிறுவனமான ஸ்டாட்லர் ரெயில் (Stadler Rail) பதிலாக வெளிநாட்டு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பது பலரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 2 பில்லியன் சுவிஸ் பிராங்க் ஆகும். சுவிஸ் உற்பத்தியை விட சிமென்ஸ் நிறுவனம் சிறிதளவு குறைந்த விலை மற்றும் நிலைத்தன்மை (sustainability) மதிப்பீட்டில் உயர்ந்த மதிப்பெண் பெற்றதனால் அவர்களைத் தேர்ந்தெடுத்ததாக SBB விளக்கம் அளித்துள்ளது.
ஆனால் அரசியல்வாதிகள் இந்த முடிவை “முட்டாள்தனமான தீர்மானம்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளனர். தேசிய சபை உறுப்பினர் கெர்ஹார்ட் பிஸ்டர் (Gerhard Pfister) கூறியதை மேற்கோள் காட்டி Blick நாளிதழ் “எவ்வளவு முட்டாளாக இருக்க முடியும்?” என்ற தலைப்பை இன்றைய பத்திரிகையில் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், கூட்டாட்சி போக்குவரத்து துறை, சுவிட்சர்லாந்து சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் இருப்பதால், நாட்டுக்குள் உள்ள நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்க முடியாது என விளக்கியுள்ளது. ஆனால் பல அரசியல்வாதிகள், சட்டம் சில அளவில் சுவிஸ் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க வாய்ப்பளிக்கிறது என வாதிடுகின்றனர்.
ஸ்டாட்லர் ரெயில் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக சுவிஸ் உற்பத்தி துறையில் பெரும் பங்காற்றி வந்ததால், இந்த முடிவு உள்ளூர் தொழில்துறைக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் என வணிக வட்டாரங்கள் எச்சரிக்கின்றன. மக்கள் வரி பணத்தில் நிதியளிக்கப்படும் திட்டங்களில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்குவது நியாயமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
© WRS