சுவிட்சர்லாந்தில் சோலார் விமானத்தில் நிகழ்த்தப்பட்ட உலகச் சாதனை
வலேஸ் மாநிலத்தில் சோலார்ஸ்ட்ராட்டோஸ் (Solarstratos) குழு, மின்சாரம் மற்றும் சூரிய ஆற்றலில் இயங்கும் விமானத்தால் உலகின் உயர்ந்த பறப்புச் சாதனையை முறியடித்துள்ளது.
நேற்று முன்தினம் விமானி ரபாயல் டோம்ஜான் (Raphaël Domjan) சியோன் (Sion) விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, 9,521 மீட்டர் உயரத்தை எட்டினார். இதனால், பெர்ட்ராண்ட் பிக்கார்ட் (Bertrand Piccard) மற்றும் Solar Impulse திட்டம் 9,235 மீட்டரில் பதிவு செய்திருந்த முந்தைய உலகச் சாதனையை அவர் முறியடித்தார். இருப்பினும், இந்தப் புதிய சாதனைக்கு சர்வதேச விமானப் பேரவை (FAI) இன்னும் உத்தியோகபூர்வ அங்கீகாரம் அளிக்கவில்லை.

டோம்ஜானின் அடுத்த இலக்கு – சூரிய ஆற்றல் விமானத்துடன் 10,000 மீட்டர் உயரத்தை தாண்டும் உலகின் முதல் விமானியாக மாறுவது. இந்தச் சாதனை குழுவினருக்கும் டோம்ஜானுக்கும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது; இந்த சந்தோசத்தில் அவர்கள் ராக்லெட் (raclette) விருந்து வைத்து கொண்டாடினர்.
53 வயதான நியூசாட்டல் (Neuchâtel) மாநிலத்தைச் சேர்ந்த டோம்ஜான், இந்த முயற்சியின் மூலம் சூரிய ஆற்றல் விமானப் போக்குவரத்தின் திறனையும் எதிர்கால சாத்தியங்களையும் உலகுக்கு காட்ட விரும்புகிறார்.