சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் மின்சார வாகனங்களை வயர்லஸ் முறையில் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் மின்சார கார் பயனாளர்களுக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கம்பிகள் இல்லாமல் நடைபெறும் இந்த wireless charging முறை, பாரம்பரிய கம்பி சார்ஜ் முறையுடன் சமமான திறன் (90% அளவு) கொண்டது என சுவிஸ் பெடரல் பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகமான Empa தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த இன்டக்டிவ் சார்ஜிங் முறையில், நிலத்தடத்தில் பொருத்தப்பட்ட மின் சுருளில் இருந்து மின்சக்தி காந்த அலைகள் மூலம் நேரடியாக வாகனத்துக்குப் பரிமாறப்படுகிறது.

இது இன்று மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் wireless charging முறையைப் போன்றதாகும். ட்யூபென்டார்ஃப் பகுதியில் உள்ள Empa வளாகத்தில் சிறப்பு மின்சுருள்கள் பொருத்தப்பட்ட கார்கள் பயன்படுத்தி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பனி, மழை, வெப்பநிலை மாற்றம் உள்ளிட்ட இயற்கை சூழல்களில் கூட சோதனை வெற்றிகரமாக நடந்தது.
சார்ஜ் தொடங்குவதற்கு வாகனம் தரையில் உள்ள மின்சுருள் மேல் துல்லியமாக நிறுத்தப்பட வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் parking assistant எனப்படும் தானியங்கி பார்க்கிங் அமைப்பு இந்த பணியை மேற்கொள்ளும் என Empa தெரிவித்துள்ளது.
Inlade எனப்படும் இந்த திட்டத்தை எரிசக்தி வழங்கும் நிறுவனம் Eniwa வழிநடத்தியது. ஸ்விஸ் பெடரல் எரிசக்தி அலுவலகம், சூரிச் மற்றும் ஆர்காவ் கான்டன்களும் திட்டத்திற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு வழங்கின.