வின்டர்தூர் கேரேஜ் தீ – ஒருவர் காயம், நூற்றுக்கணக்கான வாகனங்கள் சேதம்
ஸ்விட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தின் வின்டர்தூர் (ZH) நகரில் உள்ள ஒரு வாகன பராமரிப்பு கேரேஜில் ஏற்பட்ட தீ விபத்தில், 66 வயதான ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது; நூற்றுக்கணக்கான வாகனங்கள் சேதமடைந்தன. ஆரம்ப மதிப்பீட்டின்படி, பல இலட்சம் பிராங்க் மதிப்பிலான சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை 11.30 மணியளவில், (சென்ட்காலர் வீதியில்) St. Gallerstrasse-இல் அமைந்துள்ள கேரேஜில் தீ ஏற்பட்டதாக அங்குள்ள குடியிருப்போர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர், வலது பக்கத்தில் உள்ள பழுது பார்த்து கொடுக்கும் பிரிவுகள் முழுவதும் தீப்பிடித்திருந்ததை கண்டனர்.
விரைவான நடவடிக்கையால் தீ கட்டடத்தின் பிற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இருப்பினும், வலது பக்க கட்டிடப்பகுதி மற்றும் பல வாகனங்கள் முற்றிலும் அழிந்தன.

தீ ஏற்பட்ட போது கட்டிடத்தின் உள்ளே இருந்த 66 வயது நபர் லேசாக காயமடைந்தார். அவருக்கு முதலில் இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தீ காரணமாக, SBB ரயில் பாதையின் ரயில் சேவை மதியம் 12.00 மணி முதல் 14.40 மணி வரை நிறுத்தப்பட்டு மாற்று பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல், St. Gallerstrasse பல மணி நேரங்கள் போக்குவரத்துக்கு மூடப்பட்டது, மாற்று வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
தீ விபத்தின் காரணம் இதுவரை தெரியவில்லை; போலீசும், மாநில வழக்கறிஞர் அலுவலகமும் விசாரணை நடத்தி வருகின்றன.