கடை காலி செய்யும் விற்பனை என்ற பெயரில் போலி நகை விளம்பரங்கள்
சுவிட்சர்லாந்தில் சமீப நாட்களாக, “கடை காலி செய்யும் விற்பனை” என்ற பெயரில் பரவும் போலி நகை விற்பனை விளம்பரங்கள் குறித்து பல புகார்கள் வந்துள்ளதாக ஷ்விட்ஸ் கன்டோனல் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளது.
“ப்ருன்னர் லூசேர்ன் (Brunner Luzern)” என்ற பெயரில் ஒரு நகைக் கடை இருப்பதாக கூறி, சமூக ஊடகங்கள் மற்றும் இணைய தளங்களில் தள்ளுபடி விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால் அந்தப் பெயரில் எந்த நகைக் கடையும் உண்மையில் இல்லை என போலீசார் உறுதி செய்துள்ளனர். இந்த விளம்பரங்களை நம்பி ஆர்டர் செய்தால், நகைகள் எதுவும் கிடைக்காது; அதற்காக செலுத்திய பணமும் திரும்பப் பெற முடியாததாகி விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையாக இருக்க முடியாத அளவுக்கு மிக அதிக தள்ளுபடியில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய மோசடி விளம்பரங்களில் பெரும்பாலும் பல எழுத்துப் பிழைகள் காணப்படுவது, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் பயன்படுத்தப்படுவது, தொலைபேசி எண் அல்லது முகவரி போன்ற தெளிவான தொடர்பு விபரங்கள் இல்லாதது போன்ற அம்சங்கள் இடம்பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உண்மையான வணிக நிறுவனங்களின் இணைய முகவரிகள் பெரும்பாலும் .com என முடிவடைவது அரிது என்றும் ஷ்விட்ஸ் கன்டோனல் போலீசார் சுட்டிக்காட்டியுள்ளனர். இணைய வழி வாங்கும் முன் வணிக நிறுவனத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என்றும், சந்தேகமான விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்களிடம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
© Kapo SZ