போலி காவல்துறை அழைப்புகள் குறித்து லீக்டென்ஸ்டைன் நாட்டில் எச்சரிக்கை
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, லீக்டென்ஸ்டைன் நாட்டின் Landespolizei பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சமீப நாட்களில், உயர்தர ஜெர்மன் மொழியில் பேசும் ஒரு பெண் தன்னை காவல்துறை அதிகாரி என அறிமுகப்படுத்தி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதாக பலர் புகார் அளித்துள்ளனர்.
இந்த மோசடி அழைப்புகளில் ஈடுபடுவோர், குறிப்பாக வயதானவர்களை இலக்காகக் கொண்டு செயல்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. “உங்கள் மகன் அல்லது மகள் ஒரு விபத்தில் சிக்கியுள்ளார்” என்ற தகவலை கூறி, சம்பந்தப்பட்ட வாகனம் காப்பீடு செய்யப்படவில்லை என்றும், அதனால் உடனடியாக ஜாமீன் தொகை செலுத்தாவிட்டால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறி பணம் கேட்பதே இவர்களின் பிரதான தந்திரமாக உள்ளது.
சில சந்தர்ப்பங்களில், அழைப்பைப் பெறுபவருக்கு சந்தேகம் ஏற்பட்டால், பின்னணியில் அழும் சத்தம் கேட்கும் வகையில் நாடகமாடி, அவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்டவர்களை அவசர முடிவுகள் எடுக்க வைக்கும் ஒரு மிக ஆபத்தான மோசடி முறையாகும்.

இதனால், இத்தகைய சந்தேகமான தொலைபேசி அழைப்புகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், தொலைபேசியில் பணம், சேமிப்பு அல்லது மதிப்புள்ள பொருட்கள் குறித்து எந்த தகவலையும் வழங்கக் கூடாது என்றும் லீக்டென்ஸ்டைன் காவல்துறை வலியுறுத்தியுள்ளது. காவல்துறை அதிகாரிகள் என கூறி அழைப்பவர்கள் மீது எப்போதும் சந்தேகமாக அணுக வேண்டும்; உண்மையான காவல்துறை ஒருபோதும் தொலைபேசி மூலம் பணம் அல்லது ஜாமீன் தொகை கேட்காது என்றும் நினைவூட்டப்பட்டுள்ளது.
மேலும், பணம் கோரும் அழைப்புகள் வந்தால் உடனடியாக குடும்ப உறுப்பினர்கள் அல்லது நம்பகமானவர்களுடன் ஆலோசிக்க வேண்டும் என்றும், எந்த அழுத்தத்திற்கும் உட்பட்டு வங்கியில் இருந்து பணம் எடுக்கவோ அல்லது தெரியாத நபர்களிடம் பணம் ஒப்படைக்கவோ கூடாது என்றும் பொதுமக்களை லீக்டென்ஸ்டைன் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
© Landespolizei Fürstentum Liechtenstein