சூரிக்கில் பொதுப் போக்குவரத்து கட்டணக் குறைப்புக்கு சங்கங்களின் விமர்சனம்
சுவிஸ் பொதுப் போக்குவரத்து துறையிலுள்ள முக்கிய அமைப்புகள், கட்டணங்களில் பொதுவான சலுகைகளை வழங்கும் முயற்சிகளுக்கு விமர்சன குரல் எழுப்பியுள்ளன.
கடந்த ஞாயிறு, நகர சபையின் பரிந்துரைக்கு மாறாக, சூரிக் மக்கள் பொதுப் போக்குவரத்து சீசன் பாஸ் விலை குறைப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம், ஆண்டு சந்தா கட்டணம் தற்போதைய 800 ஃப்ராங்கிலிருந்து 365 ஃப்ராங்காக குறைக்கப்பட உள்ளது.
ஆனால் சுவிஸ் பொதுப் போக்குவரத்து சங்கம் இந்த நடவடிக்கை பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க போதுமானதல்ல என்று எச்சரித்துள்ளது. அவர்களது பார்வையில், மக்களை ஈர்க்கும் முக்கிய அம்சம் விலை அல்ல, சேவையின் தரமும் விரிவான போக்குவரத்து இணைப்புகளுமே ஆகும். மேலும், நாடு முழுவதும் சவால்கள் ஒரே மாதிரி இல்லாமல் மண்டலத்துக்கு மாறுபடும்; குறிப்பாக ரயில் பாதை உள்கட்டமைப்பு நிதி பூர்த்தி செய்வதில் சிக்கல்கள் தொடர்கின்றன.
Litra என்ற போக்குவரத்து தகவல் சேவையும், தேசிய கட்டணங்களை நிர்வகிக்கும் Alliance Swiss Pass அமைப்பும், சூரிக்கின் முடிவை விமர்சித்துள்ளன. “வாடிக்கையாளர்கள் குறைவாக பணம் செலுத்தினாலும், சேவையை நடத்தும் செலவுகள் குறையாது; இறுதியில் சுமையை மக்கள் செலுத்தும் வரிகளே நிரப்ப வேண்டும். மேலும் போக்குவரத்து வலையமைப்பின் அடர்த்தி மற்றும் தரத்தை பராமரிக்க தொடர்ச்சியான முதலீடு அவசியம்,” என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சில நகரங்கள் மட்டுமே குறிப்பிட்ட பிரிவுகளுக்கு சலுகைகள் வழங்கும் வகையில் செயல்பட முடியும். உதாரணமாக, ஜெனீவாவில் 24 வயதிற்குக் குறைவான இளைஞர்கள் இலவசமாக பயணிக்கின்றனர். ஆனால் இத்தகைய திட்டங்கள் நகரங்களின் நிதி திறனைப் பொறுத்தே அமையும்.
சூரிக்கில் தற்போது நிறைவேற்றப்பட்ட மக்கள் முன்முயற்சியால், எவ்வளவு கூடுதல் செலவு நகரத்திற்கு ஏற்படும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. புதிய தள்ளுபடி அதிக சந்தாதாரர்களை ஈர்த்தால், வருடாந்திர செலவு 140 மில்லியன் ஃப்ராங்கு வரை உயரக்கூடும். கூடுதல் சந்தாதாரர்கள் வராத பட்சத்தில், ஏற்கனவே உள்ள பயணிகளுக்கான தள்ளுபடி மட்டும் 52 மில்லியன் ஃப்ராங்காகும். நிதி பொறுப்பாளர் டேனியல் லியூபி, “இந்தத் திட்டம் அடுத்தகால முதலீடுகளுக்கான நிதியை குறைக்கக்கூடும்,” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சூரிக் மற்றும் ஜெனீவாவைத் தவிர லுசேர்ன், பாசல் (அரசுப் பணியாளர்களுக்காக), பெர்ன் (இளைஞர்களுக்காக) போன்ற நகரங்களும் இதேபோன்ற சலுகைகளை ஆராய்ந்து வருகின்றன. டிசினோவில் கூட 5,600 கையொப்பங்களுடன், இளைஞர்களுக்கான கட்டணக் குறைப்பை கோரி மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தாலும், விலை குறைப்பை விட தரமான சேவைகள் மற்றும் வலுவான உள்கட்டமைப்புகளே மக்களை ஈர்க்கும் முக்கிய கருவி என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
© Keystone SDA