கிரான்ஸ்-மொண்டானா விபத்து : இத்தாலி அமைச்சர் தாஜானி நேரில் ஆய்வு
கிரான்ஸ்-மொண்டானாவில் நிகழ்ந்த பேரவலத்தைத் தொடர்ந்து, இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர் Antonio Tajani வெள்ளிக்கிழமை வலைஸ் மாநில அரசின் தலைவர் Mathias Reynard உடன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். சுவிட்சர்லாந்துடன் நடைபெறும் ஒத்துழைப்பு “மிகவும் நேர்மறையாக உள்ளது” என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ஜனவரி 1 அன்று தீப்பற்றிய “Le Constellation” பாரைச் சுற்றியுள்ள வெள்ளை திரைகளின் அருகே, உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து தாஜானி மலர் வளையம் வைத்தார். கடந்த நாட்களாக சுவிட்சர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் இக்னாசியோ காஸிஸ் உடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், இத்தாலி தூதர் மற்றும் ஜெனீவாவிலுள்ள தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்து இத்தாலியர்களுக்கு தேவையான தகவல்களையும் உதவிகளையும் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க இத்தாலி முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாக தாஜானி கூறினார். மிலானுக்கு அருகிலுள்ள நிக்வார்டா மருத்துவமனையில் காயமடைந்த நபர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார். பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண சுவிட்சர்லாந்துக்கு இத்தாலிய நீதித்துறை காவல்துறையின் உதவியும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த தீ விபத்தில் 13 இத்தாலியர்கள் காயமடைந்துள்ளதாகவும், ஆறு பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் தாஜானி கூறினார். வலைஸ் கன்டோனல் போலீசார் தெரிவிப்பதன்படி, கிரான்ஸ்-மொண்டானா பனிச்சறுக்கு சுற்றுலா நகரில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், 115 பேர் தீவிரமாக காயமடைந்துள்ளனர். பெரும்பாலானவர்கள் இளம் வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
காயமடைந்தவர்கள் சியோன், லௌசான், பெர்ன், ஜெனீவா மற்றும் சூரிச் உள்ளிட்ட சுவிட்சர்லாந்தின் பல மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அண்டை நாடுகளும் சிறப்பு மருத்துவ மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க முன்வந்துள்ளன. இத்தாலி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்களது குடிமக்களில் சிலர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் அல்லது காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
© KeystoneSDA