பெர்ன் நகரில் அனுமதி இல்லாத பேரணி: போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்து எச்சரிக்கை
Switzerland நாட்டின் தலைநகரமான Bern நகரில், வரும் சனிக்கிழமை (17.01.2026) பிற்பகலில், Bahnhofplatz பகுதியில் அனுமதி பெறாத ஒரு பேரணி நடைபெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை பெர்ன் நகர நிர்வாகத்திடம் இந்தப் பேரணிக்கான எந்த அனுமதி கோரிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், (துன்ஷ்ட்ராசே)Thunstrasse பகுதியில் அனுமதி பெற்ற ஒரு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இரு நிகழ்வுகளிலும் பெருமளவு மக்கள் கலந்து கொள்ளக்கூடும் என்பதால், நகரின் மையப் பகுதிகளில், குறிப்பாக ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள இடங்களில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சர்வதேச அரசியல் சூழ்நிலை, எதிர்பார்க்கப்படும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் கடந்த காலத்தில் நடைபெற்ற இதே போன்ற பேரணிகளின் அனுபவங்களை கருத்தில் கொண்டு, பெர்ன் கன்டோனல் காவல் துறை, அதிக எண்ணிக்கையிலான காவலர்களை பணியில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. கூடுதலாக, பிற கன்டோன்களிலிருந்தும் காவல் படையினர் உதவிக்காக அழைக்கப்படவுள்ளனர்.

பொது பாதுகாப்பை உறுதி செய்வதும், முக்கிய கட்டிடங்கள் மற்றும் அடித்தள வசதிகளை பாதுகாப்பதும் இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும் என காவல்துறை தெரிவித்துள்ளது. நகரின் மையப் பகுதியில், குறிப்பாக Bahnhof சுற்றுவட்டாரத்தில், பிற்பகல் நேரங்களில் போக்குவரத்து தடை அல்லது மாற்றங்கள் அமல்படுத்தப்படலாம் என்பதால், பொதுமக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு கூடுதல் நேரம் ஒதுக்கி பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கன்டோன் முழுவதும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் தடுப்பு காவல் கண்காணிப்பு வழக்கம்போல தொடரும் என்றும், அவசர நிலை ஏற்பட்டால் 117 அல்லது 112 என்ற அவசர அழைப்பு எண்கள் மூலம் எந்நேரமும் காவல்துறையை தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் புரிதலும் ஒத்துழைப்பும் இந்த நேரத்தில் அவசியம் என பெர்ன் கன்டோனல் காவல் துறை தெரிவித்துள்ளது.
© Kapo BE