நியுஷாதல் பகுதியில் இளைஞர்கள் மோதல்: ஒருவர் காயம், பலர் கைது
நியுஷாதல் (Neuenburg) மற்றும் ப்ரைபூர்க் (Freiburg) பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து நியுஷாதல் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். 2026 பிப்ரவரி 11ஆம் தேதி புதன்கிழமை மாலை சுமார் 5.00 மணியளவில், நியுஷாதல் நகரின் மொன்றூஸ் (Monruz) பகுதியிலும், ரூ டே குத்த் டோர் (Rue des Gouttes d’Or) அருகிலும் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் பத்து இளைஞர்கள் இதில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து நியுஷாதல் அவசர உதவி மையத்திற்கு பல முறை அழைப்புகள் வந்ததையடுத்து, போலீஸ் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று பகுதியை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து ஆரம்ப சாட்சியங்களை பதிவு செய்தனர்.
இந்த மோதலில் நியுஷாதல் கன்டோனைச் சேர்ந்த ஒரு சிறுவன் கையில் காயமடைந்தார். அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக லௌசான் (Lausanne) நகரில் உள்ள CHUV பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆரம்ப தகவலின்படி, கூர்மையான பொருளால் அவர் காயமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து தெளிவான தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் பலரை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். மோதல் நடந்த சூழ்நிலைகள், காரணங்கள் மற்றும் இதில் ஈடுபட்டவர்களின் பங்கு குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் மேலான விசாரணையை நியுஷாதல் போலீசின் குற்றப்புலனாய்வு பிரிவு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக உடல் மற்றும் பாலியல் பாதுகாப்பு தொடர்பான பிரிவு (ICS – Körperliche und sexuelle Unversehrtheit) இந்த வழக்கை கையாள்கிறது. சம்பவத்தில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, மோதல் எவ்வாறு தொடங்கியது மற்றும் அதன் பின்னணி என்ன என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.