சூரிச்சில் மே 1 தொழிலாளர் தினத்தில் பத்தாயிரம் பேர் ஆர்ப்பாட்டம் இன்று மே 1. சூரிச்சில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களது அதிகாரப்பூர்வமான அணிவகுப்பில் சுமார் பத்தாயிரம் பேர் வரையில் கலந்துகொண்டுள்ளனர்.
சூரிச் நகரத்தின் வழியாக அணிவகுத்துச் சென்றவர்களில் பெரும்பான்மையானவர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் சில முகமூடி அணிந்தவர்கள் சொத்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
சூரிச்சில் உள்ள கிரடிட்சுயிஸ், முல்லர், லெதறாக், உ பி எஸ் போன்ற பிரபல நிறுவனங்களுக்கு சொந்தமான கடைகள் மீது தாக்குதல் நடத்துப்பட்டுள்ளது. கடை ஜன்னல்கள் மீது நிறப்பூச்சுகள் பூசப்பட்டும் சில ஜன்னல்கள் உடைக்கப்பட்டும் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
(c) Nico Leuthod (Nau.ch)
அணிவகுப்பு பாதை ஹெல்வெட்டியாப்ளாட்ஸிலிருந்து செக்செலுடென்பிளாட்ஸ் வரை சென்றது. அங்கு இறுதி பேரணி நடைபெற்றது. அங்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு அமைப்பினரும் கோசங்களை எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் போது கலகம் அடக்கும் போலீசார் படையும் களத்தில் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த ஆர்ப்பாட்டம் பற்றி சூரிச் கன்டோனல் போலீசார் தெரிவிக்கையில், இடதுசாரி தன்னாட்சி கட்சியைச் சேர்ந்த சில முகமூடி அணிந்தவர்களால் ஒரு சில நாசகார சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதும், பெரியளவிலான வன்முறை சம்பவங்கள் இன்றி ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றதாகவும் குறிப்பிட்டனர்.
இதே வேளையில் இன்று காலை 10 மணியளவில் பாசல் நகரிலும் பாரியளவிலான ஒரு மே தின ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.