பிரெஞ்சு மொழிப் பகுதிகளில் தொலைபேசி மோசடி அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழிப் பகுதிகளில் தொலைபேசி மூலம் நடைபெறும் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்று Kantonspolizei Jura எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கம் முதல், தங்களை போலீஸ் அதிகாரிகள் அல்லது வங்கி ஊழியர்கள் என போலியாக அறிமுகப்படுத்திக் கொண்டு மக்களை ஏமாற்றும் சம்பவங்கள் குறித்து தொடர்ச்சியாக புகார்கள் பதிவாகி வருvகின்றன. பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் சந்தேகமான நிலை ஏற்பட்டால் உடனடியாக 117 என்ற அவசர எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும், சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழிப் பகுதிகளில் 930-க்கும் மேற்பட்ட தொலைபேசி மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 274 சம்பவங்கள் வெற்றிகரமாக நடந்துள்ளன; மேலும் 657 முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளதாக இந்தக் கணக்கில் தெரியவந்துள்ளது. இச்சம்பவங்களால் மொத்தமாக 2.4 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்க்களுக்கு மேல் நட்டநஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மோசடிக்காரர்கள் பொதுவாக தங்களை போலீசார், வங்கி பணியாளர்கள் அல்லது மோசடி தடுப்பு பிரிவு அதிகாரிகள் எனக் காட்டிக்கொண்டு, அவசரமான மற்றும் பயமுறுத்தும் தகவல்களை கூறி பாதிக்கப்பட்டவர்களை மனஅழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றனர். அதன் பின்னர், பணம், வங்கி அட்டைகள், நகைகள் போன்ற மதிப்புள்ள பொருட்களை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முயலுகின்றனர்.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடையதாக இந்த ஆண்டில் இதுவரை சுமார் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பலர் சமூக வலைத்தளங்கள் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ‘கூரியர்கள்’ எனப்படும் இடைநிலை நபர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்களின் பணி, பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் பெயரில் அவர்களிடம் இருந்து பொருட்களை நேரடியாக சேகரிப்பதாகும்.
மேலும், விரைவில் அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறும் வேலை வாய்ப்பு விளம்பரங்கள் பெரும்பாலும் நம்பகமற்றவை என்பதையும், அவற்றை சந்தேகத்துடன் அணுக வேண்டும் என்பதையும் போலீசார் தெரிவித்துள்ளனர். எந்த வகையிலும் மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தொலைபேசி அல்லது வீட்டு வாசலில் யாராலும் அழுத்தம் கொடுக்கப்பட்டால் உடனடியாக மறுக்க வேண்டும். அந்நிய நபர்களுக்கு பணம், வங்கி அட்டைகள் அல்லது நகைகள் வழங்க வேண்டாம். தனிப்பட்ட கடவுச்சொற்கள் அல்லது வங்கி விவரங்களை ஒருபோதும் பகிர வேண்டாம். இவ்வகை மோசடிகள் குறித்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பேசுவது முக்கியம். யாரேனும் சந்தேகத்திற்கிடமான முறையில் தொந்தரவு செய்தால் உடனடியாக 117 என்ற அவசர எண்ணை அழைக்க வேண்டும் என அதிகாரிகள் மீண்டும் நினைவூட்டியுள்ளனர். © Kapo Jura