சுவிட்சர்லாந்தில் மூத்த பெண்களை ஏமாற்றிய தொலைபேசி மோசடி: இருவருக்கு சிறை தண்டனை
2022 மற்றும் 2023 காலப்பகுதியில் சுவிட்சர்லாந்தில் வசித்த வயோதிக பெண்களை குறிவைத்து செயல்பட்ட தொழில்முறை தொலைபேசி மோசடி கும்பலைச் சேர்ந்த இரு ஆண்களுக்கு, பாடன் மாவட்ட நீதிமன்றம் கடும் தண்டனை விதித்துள்ளது என ஆர்காவ் மாநில செய்தி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
36 வயதுடைய துருக்கிய குடிமகனுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 12 ஆண்டுகள் நாட்டிலிருந்து வெளியேற்றும் உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது. 35 வயதுடைய இத்தாலிய குடிமகனுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒரு ஆண்டு சிறையில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த கும்பல் துருக்கியில் இருந்த முக்கிய சூத்திரதாரர்களின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டு, தங்களை போலீசார் அல்லது வங்கி ஊழியர்கள் என அறிமுகப்படுத்தி, வயோதிக பெண்களின் சேமிப்பு பணம் ஆபத்தில் இருப்பதாக கூறி ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் தெரியவந்தது. போலி ரசீதுகள் மற்றும் நிறுவன கணக்குகளை பயன்படுத்தி, மொத்தம் 4 இலட்சத்து 25 ஆயிரம் சுவிஸ் ஃப்ராங்குகள் மோசடி செய்யப்பட்டுள்ளன.
ஒரு 92 வயதுடைய ஆர்காவ் கன்டோனில் வசிக்கும் பெண் ஒருவரிடமே சுமார் 2 இலட்சத்து 70 ஆயிரம் ஃப்ராங்குகள் இழந்துள்ளதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. வங்கிகளும் காவல் துறையும் தலையிட்டதாலேயே, மேலும் பெரிய தொகை இழப்பது தடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.