ஜெனீவா விமான நிலையத்தில் தாலிபான் பிரதிநிதிகள் – அகதி அடையாளம் காண சுவிஸ் அரசின் அழைப்பு
ஆகஸ்ட் 19, செவ்வாய்க்கிழமை இரவு. ஜெனீவா விமான நிலையத்தில் ஒரு விமானம் தரையிறங்கியது. பயணிகளுடன் அதில் ஆப்கானிஸ்தானை 2021 முதல் ஆட்சி செய்து வரும் தாலிபான் அமைப்பின் நான்கு பிரதிநிதிகளும் இருந்தனர். அதிகாரபூர்வ அழைப்பும் விசாவும் வழங்கி, சுவிஸ் குடியேற்றத் துறை இவர்களை வரவேற்றது. தாலிபான் அதிகாரிகள் சுவிஸுக்கு வந்தது சுற்றுலா காரணமாக அல்ல; குறிப்பிட்ட பணிக்காகவே.
இரண்டு இரவுகள் அவர்கள் ஜெனீவா விமான நிலைய வளாகத்திலேயே தங்கினர், வெளியே செல்லவில்லை. அவர்களுக்கான பணி, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்ததாகக் கூறப்படும் 13 ஆண்களை அடையாளம் காண்பது. இதில் இருவர் தன்னார்வத்துடன் நாடு திரும்ப விரும்புவோர்; மீதமுள்ள 11 பேர் குற்றவாளிகள், அவர்களை நாடு கடத்த சுவிஸ் அரசு திட்டமிட்டுள்ளது. அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த தாலிபான் பிரதிநிதிகள் பேச்சு வழக்கு மற்றும் உள்ளூர் உச்சரிப்பு போன்றவற்றை பயன்படுத்தி ஆய்வு செய்தனர்.

இந்த விஜயம் தாலிபானால் தானாக ஏற்பாடு செய்யப்பட்டது அல்ல; சுவிஸ் அரசே அதிகாரப்பூர்வமாக ஏற்பாடு செய்தது. செலவுகளையும் அரசு தான் ஏற்றுக்கொண்டது. வருவாய்-செலவுக் கணக்கின் படி, விமான டிக்கெட்டுக்காக 9,692.20 சுவிஸ் பிராங்க், தங்குமிடம் மற்றும் உணவுக்காக 2,208 பிராங்க் என மொத்தம் சுமார் 12,000 பிராங்க் செலவிடப்பட்டது.
பெண்களைப் பொதுவாழ்க்கையிலிருந்து விலக்கி வைக்கும், சிறுபான்மையினரை அடக்கும், இரும்புக்கரத்துடன் ஆட்சி செய்யும் தாலிபான் ஆட்சியைச் சேர்ந்தவர்களுக்கு சுவிஸ் அரசு வசதிகள் செய்திருப்பது உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் கேள்விகளை எழுப்பியுள்ளது. மனித உரிமை பாதுகாப்பில் முன்னோடி நாடாகக் கருதப்படும் சுவிஸ், அகதி அடையாளப் பணியில் கூட இத்தகைய குழுக்களுடன் ஒத்துழைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது ஒரு சிக்கலான அரசியல் நிலையை வெளிப்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
© KeystoneSDA