Swisscom சந்தாக்களின் கட்டணம் உயர்வு: ஏப்ரல் 1 முதல் அமல்
சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவமான Swisscom, தனது இணையம், மொபைல், தொலைக்காட்சி மற்றும் நிலைத்த தொலைபேசி சேவைகளுக்கான சந்தா கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என நிறுவனம் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
அறிவிப்பின்படி, Swisscom-இன் இணையம் மற்றும் மொபைல் சந்தாக்களுக்கு மாதத்திற்கு கூடுதலாக 1.90 சுவிஸ் ஃபிராங்குகள் வசூலிக்கப்படும். அதேபோல், தொலைக்காட்சி மற்றும் நிலைத்த தொலைபேசி (Fixed network) சேவைகளுக்கான சந்தாக்களுக்கு மாதத்திற்கு 0.90 சுவிஸ் ஃபிராங்குகள் உயர்வு செய்யப்படுகிறது. இந்த கட்டண மாற்றம் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல், தற்போதுள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என Swisscom தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு வரும் நாட்களில் தனிப்பட்ட முறையில் அறிவிப்பு அனுப்பப்படும் என்றும், இந்த கட்டண உயர்வை ஏற்க விருப்பமில்லாதவர்கள் ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு முன்பே தங்கள் சந்தாவை ரத்து செய்யும் உரிமை (early termination) பெற்றிருப்பார்கள் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. இது சுவிட்சர்லாந்தின் நுகர்வோர் பாதுகாப்பு விதிகளின் அடிப்படையில் வழங்கப்படும் ஒரு முக்கிய உரிமையாகும்.

இந்த கட்டண உயர்வுக்கான காரணமாக, தொலைத்தொடர்பு சந்தையில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்களை Swisscom சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் வாடிக்கையாளர்கள் பெறும் சேவைகளின் தரமும் அளவும் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ள போதிலும், சந்தா கட்டணங்கள் தொடர்ந்து குறைந்தே வந்ததாக நிறுவனம் விளக்குகிறது. மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில், தொலைத்தொடர்பு துறையில் மட்டும் இந்த போக்கு நீடித்ததாகவும் Swisscom கூறியுள்ளது.
இதன் விளைவாக, நிறுவனத்தின் மொத்த வருவாயில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அதை செலவுக் குறைப்புகள் மற்றும் செயல்திறன் மேம்பாடுகள் மூலம் மட்டுமே சமநிலைப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் Swisscom தெரிவித்துள்ளது. அதனால், நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்ய இந்த கட்டண திருத்தம் அவசியமாகியுள்ளது என நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் வாழும் பலரின் அன்றாட வாழ்க்கையில் இணையம் மற்றும் மொபைல் சேவைகள் இன்றியமையாததாக மாறியுள்ள நிலையில், Swisscom-ன் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. கட்டண உயர்வு நுகர்வோருக்கு கூடுதல் செலவாக இருந்தாலும், சேவையின் தரம் மற்றும் நம்பகத்தன்மை தொடர்ந்தும் பராமரிக்கப்படும் என Swisscom உறுதியளித்துள்ளது.
© KeystoneSDA