டிரம்ப் அழுத்தத்திற்கு தளர்ந்த சுவிஸ் நிறுவனங்கள் – பல்துறை, சமத்துவக் கொள்கைகள் நீக்கம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பல்வேறு இன, பாலின சமத்துவம் மற்றும் இணைப்பு (DEI – Diversity, Equality, Inclusion) என்ற கருத்தையே ஏற்க மறுப்பவர். இந்த நிலைப்பாட்டை, அமெரிக்காவுக்குள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தி வருகிறார்.
சுவிஸ் ஏற்றுமதிகளுக்கு 39 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க சந்தையில் தொடர்ந்து வணிகம் செய்ய விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்கள் DEI கொள்கைகளை கைவிட வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையை பெர்னில் உள்ள அமெரிக்க தூதரகம் சுவிஸ் வணிக நிறுவனங்களுக்கு அறிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

UBS, Roche, Novartis போன்ற முன்னணி சுவிஸ் நிறுவனங்கள், இந்த அரசியல் அழுத்தத்திற்கு தளர்ந்து, பெண்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு முன்னேற்ற இலக்குகளை நீக்கி, தங்கள் இணையதளங்களில் இருந்து DEI குறித்த குறிப்புகளையும் அகற்றியதாக செவ்வாய்க்கிழமை ஊடகங்கள் தெரிவித்தன.
ஆனால், Advance மற்றும் Competence Center for Diversity, Disability, and Inclusion நடத்திய சமீபத்திய ஆய்வின் படி, அமெரிக்காவிற்கு நேரடியாக ஏற்றுமதி செய்யாத பல சுவிஸ் நிறுவனங்கள், தங்களது மனிதவள கொள்கைகள் மற்றும் வணிகத் திட்டங்களில் பல்துறை, சமத்துவம் மற்றும் இணைப்பு போன்ற கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றி வருகின்றன.
இதன் மூலம், டிரம்ப் அழுத்தத்திற்கு தளர்ந்த நிறுவனங்களுக்கும், தங்களது சமூகப் பொறுப்பை உறுதியாகக் காக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் வெளிப்படையான பிளவு ஏற்பட்டுள்ளதாக சுவிஸ் ஊடகங்கள் மதிப்பிட்டுள்ளன.
@KeystoneSDA