ஆல்ப்ஸ் மலையில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் சுவிஸ் அரசு
சுவிஸ் நாட்டின் கிரௌவுண்டன் (Graubünden) மாகாணத்தில், கிளோஸ்டர்ஸ் (Klosters) மேல் பகுதியிலுள்ள மட்ரிசா சோலார் திட்டம், 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது திட்டத்தின் சுமார் 15 சதவீத உற்பத்தி மின்சார வலையமைப்பிற்கு வழங்கப்பட்டு வருகிறது என்று எரிசக்தி நிறுவனம் ரிபவர் (Repower) புதன்கிழமை அறிவித்தது.
இதுவரை 500 சோலார் பலகைகள் நிலத்தில் பொருத்தப்பட்டுள்ளன; 3,000 சோலார் மாட்யூல்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம், சுவிஸ் அரசின் “சோலார்எக்ஸ்பிரஸ்” திட்டத்தின் கீழ் மின் வலையமைப்புடன் இணைக்கப்பட்ட முதல் ஆல்ப்ஸ் சோலார் நிலையமாக மட்ரிசா மாறியுள்ளது.
இந்த சூரிய சக்தி திட்டம் மட்ரிசா சோலார் நிறுவனம் மூலம் கட்டப்பட்டது. இதில் ரிபவர், சூரிச் மாநில மின் நிறுவனம் (EKZ), மற்றும் கிளோஸ்டர்ஸ் நகராட்சி ஆகியவை தலா மூன்றில் ஒரு பங்கு பங்குதாரர்களாக உள்ளனர். இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் EKZ-க்கும், கிளோஸ்டர்ஸ்–மட்ரிசா மலை ரயில்வே இயக்கத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
Keystone-SDA
சுமார் 2,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆல்ப்ஸ் சோலார் நிலையம் குறிப்பாக குளிர்கால மின்சார உற்பத்திக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. திட்டம் முழுமையாக நிறைவடைந்த பின், வருடத்திற்கு 17 கிகாவாட் மணி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் 40 சதவீதத்துக்கும் அதிகமானது குளிர்கால மாதங்களில் உற்பத்தியாகும். மொத்த முதலீட்டுத் தொகை சுமார் 700 லட்சம் சுவிஸ் பிராங்க் ஆகும்.
இதேபோன்று, கிரௌவுண்டன் மாகாணத்தில் மேலும் இரண்டு பெரிய ஆல்ப்ஸ் சோலார் நிலையங்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. அவை ஆக்ஸ்போ (Axpo) நிறுவனம் மேற்கொள்ளும் நால்ப் சோலார் (NalpSolar) திட்டமும், எனர்ஜியா ஆல்பினா (Energia Alpina) நிறுவனம் மேற்கொள்ளும் செட்ருன் சோலார் (SedrunSolar) திட்டமும் ஆகும். இரண்டும் சூர்செல்வா (Surselva) பகுதியில் உள்ள டுயெட்ச்ச் (Tujetsch) நகராட்சியில் அமைந்துள்ளன.
சுவிஸ் அரசின் “சோலார்எக்ஸ்பிரஸ்” திட்டம், நாட்டின் ஆற்றல் தேவைகளை நிலையான முறையில் பூர்த்தி செய்வதற்கும், குறிப்பாக குளிர்காலங்களில் அதிகரிக்கும் மின்சாரப் பற்றாக்குறையை சமாளிப்பதற்கும் முன்னெடுக்கப்படுகிறது. அதில் மட்ரிசா சோலார் முன்னோடியான திட்டமாக கருதப்படுகிறது.