டெல்லி கார் குண்டு வெடிப்பில் சுவிஸ் செயலி ‘த்ரீமா’ பயன்படுத்தப்பட்டதாக விசாரணை தகவல்
டெல்லி செங்கோட்டை அருகே நவம்பர் 10 அன்று நடந்த கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்த நிலையில், இந்த தாக்குதலை ஒருங்கிணைக்க பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்ப கருவிகள் தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளிச்சம் பார்த்துள்ளன.
விசாரணையில் கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் உமர் அகமது, ஷாஹீன் ஷாஹித், முஸம்மில் ஷகீல் ஆகியோரின் மொபைல் போன்களும் டைரிகளும் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றன. முன்பு, இக்குழு தகவல் பரிமாற்றத்துக்கு டெலிகிராம் சேவையை பயன்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது, இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருந்தும், இவர்கள் சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட ‘த்ரீமா’ (Threema) எனும் மெசேஜிங் செயலியையும் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
2012ல் அறிமுகமான த்ரீமா செயலியின் முக்கிய சிறப்பம்சம், கணக்கை உருவாக்க பயனரிடம் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி தேவையில்லை மேலும், ஒருவர் மற்றொருவருடன் உரையாடத் தொடங்க, நேரில் சந்திக்கும் போது QR குறியீட்டை ஸ்கேன் செய்தாலே போதும். சந்தாதார கட்டணத்தை பிட்காயின் மூலம் செலுத்தும் வசதியும் இதில் உள்ளது.

த்ரீமா வழங்கும் வலுவான end-to-end குறியாக்க முறையால், செய்தி, படம், வீடியோ, இருப்பிடம், குழு உரையாடல், வீடியோ கால் போன்ற தரவுகளை மற்றவர்கள் தடயமறித்து கண்டுபிடிப்பது மிகுந்த சிரமம். கூடுதலாக, மெட்டாடேட்டா சேமிக்கப்படாததால், உரையாடலின் தடயத்தையே உறுதி செய்வது பாதுகாப்பு அமைப்புகளுக்கு சவாலாகிறது. இரு முனைகளில் இருந்தும் செய்திகளை முழுமையாக நீக்கும் வாய்ப்பும் இதை இன்னும் கண்காணிக்க முடியாத வகையில் மாற்றுகிறது.
இந்த பல அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு அம்சங்களால், த்ரீமா செயலி கடந்த 2023ஆம் ஆண்டு இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக தடைசெய்யப்பட்ட பல செயலிகளில் ஒன்றாகும். தற்போதைய விசாரணை, டெல்லி கார் குண்டு வெடிப்பை திட்டமிடவும், ஒருங்கிணைக்கவும் இந்த செயலி முக்கிய கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.
இந்தத் தகவல்கள் வன்முறையை தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைத்து பயன்படுத்தும் அமைப்புகளின் செயல்முறைகளை மேலும் வெளிக்கொண்டு வருவதோடு, பாதுகாப்பு அமைப்புகள் எதிர்கொள்ளும் சவால்களையும் தெளிவுபடுத்துகின்றன.