ட்ரை கிளீனிங் நிலையங்களில் பயன்படுத்தப்படும் ‘PCE’ இரசாயனம் ஈரல் சேத அபாயத்தை பல மடங்கு உயர்த்தும் என ஆய்வு எச்சரிக்கை
ஆடைகள் ட்ரை கிளீனிங் செய்யப்படும் நிலையங்களில் பொதுவாக பயன்படுத்தப்படும் டெட்ராக்ளோரோஎத்திலீன் அல்லது PCE எனப்படும் இரசாயனம், மனித உடல்நலத்திற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்று புதிய மருத்துவ ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. இந்த இரசாயனத்துக்கு நீண்டகாலமாக வெளிப்படுபவர்கள், சாதாரணத்தை விட மும்மடங்கு அதிகமான ஈரல் சேத அபாயத்துக்குள்ளாகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த சேதம் சீராக முன்னேறினால், இறுதியில் ஈரல் புற்றுநோய், மற்றும் முழுமையான ஈரல் செயலிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகளுக்கு வழிவகுக்கும். PCE-யுடன் தொடர்புடைய முக்கியமான அபாயம் MASLD எனப்படும் Metabolic Dysfunction-Associated Steatotic Liver Disease. இது ஈரலில் கொழுப்பு சேர்ந்து ஏற்படும் அழற்சியைக் காரணமாகக் கொண்ட ஒரு நோய்நிலை.
PCE-யை ட்ரை கிளீனிங் நிலையங்கள் மட்டுமின்றி, தொழில்துறை கரைப்பானாகவும் பல நாடுகளில் பரவலாக பயன்படுத்தி வந்தன. ஆனால் அதன் நீண்டகால விளைவுகள் காரணமாக, அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA) 2024 ஆம் ஆண்டில் PCE பயன்பாட்டை கட்டுப்படுத்தும் கடுமையான விதிகளை வெளியிட்டது. EPA, இந்த இரசாயனத்தை ‘மனிதர்களுக்கு வாய்ப்புள்ள புற்றுநோய் உண்டாக்கி’ என வகைப்படுத்தியுள்ளது.

வல்லுநர்கள் கூறுவதாவது, ட்ரை கிளீனிங் செய்யப்பட்ட துணிகளை அணிவதால் பெரும் ஆபத்து இல்லை. ஆனால் இந்த இரசாயனத்தின் மூலம் ஏற்படும் காற்று மற்றும் நீர் மாசுபாடே பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்படக்கூடிய பாதை. குறிப்பாக தொழில்துறை பகுதிகளில் வசிப்பவர்கள் அதிக ஆபத்துக்குள்ளாகலாம்.
புகைபிடித்தல், அதிக உடல் எடை, அளவுக்கு மீறிய மதுபானம், சில மருந்துகளின் நீண்டகால பயன்பாடு ஆகியவை MASLD உருவாகும் முக்கிய காரணிகளாக இருப்பதால், இதற்குச் PCE வெளிப்பாடும் கூடுதல் ஆபத்தாக சேருகிறது என்று ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வின் வெளியீடு, உலகளாவிய அளவில் ட்ரை கிளீனிங் துறையில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் குறித்து புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள், இதற்கு மாற்றாக மனித உடல்நலத்திற்கு பாதுகாப்பான தொழில்நுட்பங்கள் மற்றும் கரைப்பான்களை விரைவில் ஏற்க வேண்டியது அவசியம் என வலியுறுத்துகின்றன.