ஜெனீவா நகர மையத்தில் தெருவிளக்குகள் செயலிழப்பு – அதிகாரிகள் ஒப்புதல்
ஜெனீவா நகர மையத்தில் பல தெருவிளக்குகள் நீண்ட நாட்களாக செயலிழந்துள்ளன என்ற குடியிருப்பாளர்களின் புகார்களுக்கு பிறகு, நகராட்சி நிர்வாகம் பிரச்சனையை ஒப்புக்கொண்டுள்ளது. நகரம் வெளியிட்ட தகவலின்படி, பெரும்பாலான விளக்குகள் பல ஆண்டுகளாக பழையதாக இருப்பதால், அவற்றுக்கான மாற்று உதிரிபாகங்கள் இனி எளிதில் கிடைக்கவில்லை. தற்போது இருக்கும் உதிரிபாகக் கையிருப்பும் முழுவதுமாக முடிந்துவிட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக லிபரல் கட்சி நகர மன்ற உறுப்பினர் பியர் டி போக்கார்ட், நகராட்சியிடம் முழுமையான பராமரிப்பு திட்டத்தை அவசரமாக உருவாக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தெருவிளக்குகள் சரியாக இயங்காதது பொதுமக்களின் பாதுகாப்பை நேரடியாக பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சனை என அவர் குறிப்பிட்டார்.

20 Minutes பத்திரிகை வெளியிட்ட அறிக்கையின்படி, Bel-Air முதல் Rive வரை நடைபயணம் மேற்கொண்டால் மொத்தம் 53 விளக்குத்தூண்களில் 21 விளக்குகள் செயலிழந்த நிலையில் இருப்பதை எளிதில் காணலாம். இரவு நேரத்தில் நகர மையத்தில் வெளிச்சம் குறைவாக இருப்பது குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
நகராட்சி தற்போது பழைய விளக்குகளைப் புதுப்பித்து, புதிய சக்தி-சிக்கன (energy-efficient) LED விளக்குகளால் மாற்றும் திட்டத்தை ஆய்வு செய்து வருவதாகவும், பிரச்சனையை விரைவில் சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
©WRS