கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்து: சுவிட்சர்லாந்து முழுவதும் மௌன அஞ்சலி
புத்தாண்டு தினத்தில் கிரான்ஸ்-மொன்டானாவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 40 பேர் உயிரிழந்ததும், 116 பேர் காயமடைந்ததையும் தொடர்ந்து, நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சுவிட்சர்லாந்து முழுவதும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இது தேசிய துக்க நாளாக அனுசரிக்கப்பட்ட நிலையில் நடைபெற்றது. அந்த ஒரு நிமிட மௌனத்தின் போது நாடு முழுவதும் தேவாலயங்களிலும் பொது இடங்களிலும் மணி ஒலிகள் ஒலித்தன.
இந்த மௌன அஞ்சலி மூலம், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும், அதேபோல் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கும் அரசாங்கம் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் மரியாதையையும் தெரிவித்தது.
தேசிய அளவிலான அஞ்சலியுடன் சேர்ந்து, உள்ளூர் மட்டத்திலும் பல இடங்களில் ஒற்றுமை வெளிப்படுத்தப்பட்டது. Bern நகரில் பிற்பகல் 2 மணிக்கு பொது போக்குவரத்து சேவைகள் 20 விநாடிகள் நிறுத்தப்பட்டன. வாகனங்களின் அவசர விளக்குகள் இயக்கப்பட்டு, நினைவஞ்சலியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், சுவிட்சர்லாந்தின் பல பள்ளிகளில் இந்த விபத்து தொடர்பான விவாதங்கள் வகுப்பறைகளில் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Keystone-SDA
Swiss Federal Railways நிறுவனமும் இந்த நினைவு நிகழ்வில் பங்கேற்றது. ரயில் நிலையங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் இறக்கப்பட்டன. பயணிகளுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அறிவிப்புகளும் ஒலிபரப்பப்பட்டன.
சுவிட்சர்லாந்தின் வான்வெளி போக்குவரத்தை கட்டுப்படுத்தும் Skyguide நிறுவனம், பிற்பகல் 2 மணியளவில் ஜெனீவா, சூரிச் மற்றும் பயர்ன் விமான நிலையங்களில் இருந்து எந்த விமானமும் புறப்பட அனுமதிக்கப்படவில்லை என சுவிஸ் செய்தி நிறுவனம் கீஸ்டோன்-ஏடிஎஸ் மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது.
இதற்கிடையில், பேர்னில் உள்ள கூட்டாட்சி நிர்வாக கட்டிடங்களிலும், நாட்டின் பல பகுதிகளிலும் கொடிகள் அரைக்கம்பத்தில் இறக்கப்பட்டிருந்தன. இந்த துயர சம்பவம் சுவிட்சர்லாந்து மக்களை ஆழமாக பாதித்துள்ள நிலையில், நாடு முழுவதும் ஒருங்கிணைந்த துக்கமும் ஒற்றுமையும் வெளிப்பட்ட நாளாக நேற்று அமைந்தது.