சூரிச்சில் அனைத்து பராமரிப்பு நிலையங்களிலும் உதவி தற்கொலைக்கு அனுமதி வழங்க திட்டம்
சூரிச் (Zürich) கன்டோனில் உள்ள அனைத்து பராமரிப்பு மற்றும் சிகிச்சை நிலையங்களிலும், உதவி தற்கொலைக்கு அனுமதி வழங்கும் விதிமுறைகளை மேலும் விரிவுபடுத்த கன்டோனல் அரசியல் வட்டாரங்கள் முன்வந்துள்ளன. ஏற்கனவே 2023ஆம் ஆண்டிலிருந்து, அரசு நிர்வகிக்கும் முதியோர் இல்லங்கள் மற்றும் மருத்துவமனைகள், உதவி தற்கொலை சேவைகளை வழங்கும் அமைப்புகள் தங்களின் வளாகங்களில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது.
ஆனால் தனியார் நிர்வகிப்பில் உள்ள பராமரிப்பு நிலையங்கள் மற்றும் முதியோர் இல்லங்கள், இதுவரை தங்களின் வளாகங்களில் இத்தகைய சேவைகளை வழங்கும் அமைப்புகளை அனுமதிக்க மறுக்கும் உரிமையை கொண்டிருந்தன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என தற்போது சூரிக் கன்டோனல் பேரவை முன்மொழிந்துள்ளது.

கன்டோனல் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கருத்துப்படி, ஒரு பராமரிப்பு நிலையத்தில் வசிக்கும் நபர், தனது வாழ்க்கையை உதவி தற்கொலை அமைப்பின் உதவியுடன் முடிக்க விரும்பினால், அது அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்ட சுயத் தீர்மான உரிமையின் ஒரு பகுதியாகும். எனவே, தனியார் பராமரிப்பு நிலையங்களின் நெறிமுறை அல்லது மத அடிப்படையிலான எதிர்ப்புகளை விட, குடிமக்களின் சுயநிர்ணய உரிமையே மேலாதிக்கம் பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
சுவிட்சர்லாந்தில் உதவி தற்கொலை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், அது சமூக, மத மற்றும் நெறிமுறை ரீதியாக தொடர்ந்து விவாதத்திற்குரிய விஷயமாக இருந்து வருகிறது. சூரிச் கன்டோனின் இந்த முன்மொழிவு, எதிர்காலத்தில் தனியார் பராமரிப்பு அமைப்புகளின் பொறுப்புகள் மற்றும் குடியிருப்பாளர்களின் உரிமைகள் குறித்த புதிய சட்ட மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.