மொழித் தடைகளால் சுவிஸில் கல்வியில் பின்தங்கும் வெளிநாட்டு குழந்தைகள்.!!
சுவிட்சர்லாந்தில் குடியேற்ற பின்னணி கொண்ட குழந்தைகளும், சுவிஸ் பெற்றோரின் குழந்தைகளும் பெறும் மொழித் திறன்களில் பெரிய பிளவு உருவாகி வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது ஐரோப்பிய ஒன்றியத்து நாடுகளை ஒப்பிடும் போது சுவிட்சர்லாந்தில் இன்னும் அதிகமாக இருப்பது கவனம் ஈர்க்கும் உண்மையாகும்.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) வெளியிட்டுள்ள இந்த ஆய்வின் படி, சுவிட்சர்லாந்தில் பிறந்த 6 இலட்சத்திற்கும் அதிகமான குடியேற்றக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வீட்டில் உள்ளூர் மொழிகள் (ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன்) ஏதையும் பேசவில்லை. இதன் விளைவாக, பள்ளிகளில் வாசிப்பு மற்றும் எழுதுதல் திறன்களில் அவர்கள் சுவிஸ் குழந்தைகளுக்கு பின்தங்கி வருகிறார்கள்.
ஓஇசிடி தரவுகள் படி, இந்த நிலை ஆஸ்டிரியா, பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் மட்டுமே சுவிட்சர்லாந்தை விட மோசமாக உள்ளது. பல மொழிகள் பேசப்படும் சுவிஸ் சமூகத்தில் மொழிக் கற்றல் ஒரு முக்கியக் கட்டமாகக் கருதப்படுகின்றது. ஆனால் வீட்டில் முழுமையாக தாய்மொழியே பயன்படுத்தப்படும் சூழல், பள்ளிகளில் பயன்படுத்தப்படும் மொழிகளை குழந்தைகள் சரிவர கற்றுக் கொள்ள முடியாமல் செய்ய்கிறது என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

குடியேற்றம் அதிகரித்துவரும் சுவிட்சர்லாந்தில், கல்வி அமைப்பு ஏற்கனவே மொழி ஒருங்கிணைப்பில் சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. பல நகரங்களில் கூடுதல் மொழி உதவி வகுப்புகள் வழங்கப்பட்டாலும், வீட்டில் மொழி பயன்பாட்டின் பற்றாக்குறை காரணமாக குழந்தைகளின் மொழித் திறன் வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு முன்னேறவில்லை.
மொழித் தடைகள், கல்வி சாதனைகள், எதிர்காலத் தொழில் வாய்ப்புகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆகியவற்றை நேரடியாக பாதிப்பதால், இது சுவிட்சர்லாந்தின் நீண்டகால கல்வி கொள்கைகளில் முக்கிய விவாதமாக உருவாகியுள்ளது. இந்த அறிக்கை, குடியேற்றக் குழந்தைகளுக்கான மொழிக் கல்வியை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை அரசும் கல்வி நிபுணர்களும் மீண்டும் சுட்டிக்காட்டுகிறது.
© SDA