கோடைகாலத்தில் சுவிட்சர்லாந்தில் ஸ்மார்ட்போன் திருட்டுகள்: 2 மில்லியன் பிராங்கு இழப்பு
சுவிட்சர்லாந்தில் கோடை காலத்தில் செல்போன் திருட்டுகள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. AXA (ஆக்ஸ்ஷா )காப்பீட்டு நிறுவனத்தின் தரவுகளின்படி, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஸ்மார்ட்போன் திருட்டுகள் மற்ற மாதங்களை விட 58% அதிகமாக உள்ளன. “வெளிநாட்டு விடுமுறைகளின்போது இந்தத் திருட்டுகள் பெரும்பாலும் நிகழ்கின்றன, இது மிகவும் தொந்தரவாக உள்ளது,” என AXA-வின் இழப்பு பிரிவு பொறுப்பாளர் ஸ்டெஃபன் முல்லர் கூறினார்.
கோடையில் மக்கள் வெளியில் அதிக நேரம் செலவிடுவதால், தெரு விழாக்கள் மற்றும் இசைத் திருவிழாக்கள் போன்ற கூட்டங்களில் திருடர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன.
இவ்வாறான செல்போன் திருட்டுகள் நகரங்களில் அதிகமாக இடம்பெறுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக ஸ்மார்ட்போன் திருட்டு புகார்கள் பதிவான ஐந்து கன்டோன்களில் நான்கு ரொமாண்டி பகுதியில் உள்ளன. அவை ஜெனீவா, பாசல்-நகரம், நூஷாட்டல், மற்றும் வோட் கன்டோன்களாகும். ஜெனீவாவில் திருட்டு புகார்கள் சுவிஸ் சராசரியை விட ஐந்து மடங்கு அதிகமாகவும், டிசினோவை விட பதினொரு மடங்கு அதிகமாகவும் உள்ளன. டிசினோவில் திருட்டு ஆபத்து மிகக் குறைவு.

2 மில்லியன் பிராங்கு இழப்பு
2015இல் ஆக்ஸ்ஷா-வுக்கு 3,500 ஸ்மார்ட்போன் திருட்டு புகார்கள் வந்த நிலையில், 2024இல் இது 2,200 ஆகக் குறைந்தது. ஆனால், ஆண்டுக்கு 2 மில்லியன் பிராங்கு இழப்பு மாறவில்லை, ஏனெனில் ஒரு திருட்டின் சராசரி இழப்பு தொகை அதிகரித்துள்ளது. “இன்றைய ஸ்மார்ட்போன்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவற்றை விட விலை உயர்ந்தவை,” என முல்லர் கூறினார்.
ஸ்மார்ட்போன் திருடப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
ஸ்மார்ட்போன் திருடப்பட்டால், உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும், பின்னர் காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும். வீட்டிற்கு வெளியே நடக்கும் திருட்டு, வீட்டு உடமைகள் காப்பீட்டு பாலிசியின் கீழ் வரும், ஆனால் வீட்டிற்கு வெளியே எளிய திருட்டு கவரேஜ் அல்லது ஸ்மார்ட்போன்களுக்கான முழு பாதுகாப்பு கவரேஜ் இருக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்ப்பட்டுள்ளது.
@Keystone sda