கிரான்ஸ்-மொண்டானா புத்தாண்டு இரவு விபத்து: அடையாளம் தெரியாத உயிர்கள், தொடரும் வேதனை
சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொண்டானாவில் புத்தாண்டு இரவில் “லே கான்ஸ்டெல்லேஷன்” பாரில் ஏற்பட்ட வெடிப்புக்குப் பிறகு, பல இளம் உயிர்கள் இன்னும் அடையாளம் தெரியாமல் உள்ளன. கடுமையாக எரிந்த நிலையில் சுவிட்சர்லாந்து முழுவதிலுமுள்ள சிறப்பு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் சிலருக்கு இன்னும் பெயர் கிடைக்கவில்லை. மகன், சகோதரி அல்லது நண்பரைத் தேடி குடும்பங்கள் தவிப்புடன் காத்திருக்கின்றன.
வலைஸ் கன்டோனின் சியோனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், உயிரிழந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் சரியாக அடையாளம் காண்பதே தற்போதைய முழு முன்னுரிமை என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடைமுறை சிக்கலானது; எதிர்பார்த்ததைவிட அதிக நேரம் எடுக்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.
தற்போதைய கணக்குப்படி 40 பேர் உயிரிழந்துள்ளனர், 119 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 113 பேரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 6 பேரை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது. அடையாளம் கண்டறியப்பட்டவர்களில் பெரும்பாலோர் சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் இத்தாலியைச் சேர்ந்தவர்கள். சிலரின் தேசியம் இன்னும் தெரியவில்லை.

மருத்துவமனைகளில் நிலைமை இன்னும் தீவிரமாக இருப்பதாகவும், குறைந்தது 80 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வலைஸ் மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சர்வதேச உதவிகள் பெருகியுள்ளன. கடுமையாக காயமடைந்த சிலர் பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு மாற்றப்படுகின்றனர். உயிரிழந்தவர்களின் அடையாளத்தை கண்டறிய இஸ்ரேல் நிபுணர் குழுவை அனுப்பியுள்ளது.
தீ விபத்துக்கான காரணமாக, சாம்பெயின் பாட்டில்களில் வைக்கப்பட்ட மெழுகுவர்த்திகள் அல்லது பெங்காலா தீப்பொறிகள் கூரைக்கு அருகில் இருந்ததே காரணமாக இருக்கலாம் என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக பாரின் மேலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
காணாமல் போனவர்களைத் தேட உதவியாக தற்காலிக இன்ஸ்டாகிராம் கணக்கும் தொடங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தனியாக விடப்படாமல், தொடர்ந்து தகவல் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
© Kapo VS