ரெகன்ஸ்டார்ஃப் பெட்ரோல் நிலைய கொள்ளை முயற்சி: இரு 17 வயது இளைஞர்கள் கைது
சூரிச் மாநிலத்தின் ரெகன்ஸ்டார்ஃப் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலைய கடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு (02 நவம்பர் 2025) நடந்த கொள்ளை முயற்சிக்குப் பிறகு, சந்தேக நபர்கள் தப்பிச் சென்றனர். ஆனால் திங்கள்கிழமை மதியம் (03 நவம்பர் 2025) அவர்கள் சென்ட்கேலன் மற்றும் சூரிச் நகரங்களில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் இரவு சுமார் 10.20 மணியளவில் நடந்தது. இரண்டு முகமூடி அணிந்த இளைஞர்கள் பெட்ரோல் நிலைய கடையின் பக்கவாசல் கதவைக் குத்தினர். கடை ஊழியர்கள் கதவைத் திறந்தவுடன், ஆயுதம் காட்டி கடைக்குள் நுழைய முயன்றனர்.
அப்போது ஊழியர்கள் வீரத்துடன் எதிர்த்ததால் கடுமையான மோதல் ஏற்பட்டது. சில நிமிடங்களுக்குப் பிறகு, குற்றவாளிகள் எதையும் கொள்ளையடிக்க முடியாமல் அங்கிருந்து தப்பினர்.

சூரிச் மாநில காவல்துறை தீவிர விசாரணை நடத்தி, இரண்டு 17 வயது இளைஞர்களை கைது செய்தது. இதில் ஒருவரான சுவிஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர் சென்ட்கேலனில் கைது செய்யப்பட்டார்; மற்றொருவர், சோமாலிய வம்சாவளியைச் சேர்ந்தவர் சூரிச் நகரில் கைது செய்யப்பட்டார்.
இருவரும் காவல்துறையினரால் விசாரணைக்குப் பின் இளைஞர் வழக்கறிஞர் அலுவலகத்திற்குச் (Jugendanwaltschaft) ஒப்படைக்கப்பட்டனர். தற்போது இவ்வழக்கின் மேலான விசாரணை சூரிச் மாநில காவல்துறை மற்றும் இளைஞர் வழக்கறிஞர் அலுவலகத்தால் முன்னெடுக்கப்படுகிறது.
சுவிஸில் சமீபகாலமாக இளைஞர்கள் ஈடுபடும் குற்றச்செயல்கள் குறித்து சமூகத்தில் அதிக கவலை எழுந்துள்ள நிலையில், இத்தகைய சம்பவம் மீண்டும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
© Kapo ZH