டார்க் வெப்பில் சுவிஸ் கிரெடிட் கார்டு தகவல்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன
இணையத்தின் இருண்ட பகுதி எனப்படும் “டார்க் வெப்” பகுதியில் போதைப்பொருள், ஆயுதங்கள், திருடப்பட்ட கலைப்பொருட்கள் மட்டுமல்லாமல், திருடப்பட்ட கிரெடிட் கார்டு மற்றும் பிற ஆன்லைன் கட்டண தகவல்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இவை வெறும் கார்டு எண்கள் மட்டுமல்ல; கார்டு வைத்திருப்பவர்களின் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களும் சேர்ந்து விற்கப்படுகின்றன. இதனால் குற்றவாளிகள் கார்டு உரிமையாளர்களாக நடித்து, ஆன்லைனில் பணம் செலுத்தவோ, பணத்தைப் பெறவோ எளிதாக முடிகிறது என இணைய பாதுகாப்பு நிறுவனம் NordVPN தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வின்படி, சுவிஸ் கிரெடிட் கார்டு தகவல்கள் ஐரோப்பாவில் மிகவும் விலை உயர்ந்தவற்றில் அடங்குகின்றன. ஒரு சுவிஸ் கார்டின் திருடப்பட்ட தகவல்கள் சராசரியாக 11.96 அமெரிக்க டாலர் (சுமார் 9.50 சுவிஸ் ஃப்ராங்க்) மதிப்பில் விற்கப்படுகின்றன. இதேபோல் ஐரோப்பாவின் பிற நாடுகளில் கார்டு தரவுகளின் சராசரி விலை சுமார் 8 டாலராகும்.

மிக உயர்ந்த விலை ஜப்பான் கார்டுகளுக்கே வழங்கப்படுகின்றன – அவை சராசரியாக 23 டாலர் வரை விற்கப்படுகின்றன. கசகஸ்தான், குவாம் மற்றும் மொசாம்பிக் நாடுகளின் கார்டுகள் சுமார் 16 டாலர் மதிப்பில் விற்கப்படுகின்றன. “பரிசோதிக்கப்பட்ட கார்டுகளில் சுமார் 87 சதவீதம் இன்னும் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாக இருந்தது; இதுவே குற்றவாளிகளுக்கு அவற்றை மீண்டும் விற்க மிகப் பெரிய வாய்ப்பாக உள்ளது,” என NordVPN நிறுவனத்தின் இணைய பாதுகாப்பு நிபுணர் அட்ரியானஸ் வார்மென்போவன் கூறியுள்ளார்.
திருடப்பட்ட கார்டு தரவுகளை விற்பனை செய்வது குற்றவாளிகளின் முதல் கட்ட லாபம் மட்டுமே. உண்மையான வருமானம் “கேஷ்-அவுட்” எனப்படும் இறுதி கட்டத்தில் தான் கிடைக்கிறது. இதில் பல நிலைகளில் பல்வேறு குற்றவாளிகள் இணைந்து செயல்படுகின்றனர். ஆன்லைனில் வாங்கும் போதும், கட்டண தகவல்களை பகிரும் போதும் கூடுதல் கவனம் செலுத்தாவிட்டால், தனிப்பட்ட நிதி விவரங்கள் குற்றவாளிகளின் கைகளில் எளிதாகச் சென்றுவிடும் அபாயம் நீடிக்கிறது என இணைய பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
© 20min