சுவிஸ் மருத்துவமனைகள் கிழக்கு ஐரோப்பிய செவிலியர்களை அதிகமாக நம்பும் நிலை
சுவிட்சர்லாந்தில் செவிலியர் பற்றாக்குறை வரலாற்றிலேயே அதிகரித்துள்ள நிலையில், மருத்துவமனைகள் வெளிநாட்டு பணியாளர்களை அதிகமாக நம்பி செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் செவிலியர்களின் பங்களிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
சுவிட்சர்லாந்து சுகாதார கண்காணிப்பு மையமான சுவிஸ் ஹெல்த் ஒப்சர்வேட்டரி (OBSAN) வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, தற்போது சுவிட்சர்லாந்தில் பணியாற்றும் செவிலியர்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு பேர் வெளிநாடுகளில் பெற்ற தகுதிப்பத்திரங்களைக் கொண்டவர்கள்.
எல்லைப்பகுதி கன்டோன்களான ஜெனீவா (Genève), நொஷாத்தெல் (Neuchâtel) மற்றும் வோ (Vaud) ஆகிய இடங்களில் இந்த விகிதம் இன்னும் அதிகமாக உள்ளது. அங்கு பணிபுரியும் செவிலியர்களில் 65 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வெளிநாட்டு கல்வித் தகுதிகளைக் கொண்டவர்களாக உள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து பணியாளர்கள் அதிகமாக வந்தாலும், சுகாதார துறையில் பல வேலைவாய்ப்புகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. இதன் காரணமாக மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் தற்போது கிழக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான ருமேனியா மற்றும் பல்கேரியா போன்ற நாடுகளிலிருந்து செவிலியர்களை அதிகமாக ஆட்சேர்ப்பு செய்யத் தொடங்கியுள்ளன என்று OBSAN தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் மக்கள் முதிர்வு அதிகரிப்பதும், சுகாதார சேவைகளுக்கான தேவை தொடர்ந்து உயர்வதும் காரணமாக, எதிர்காலத்தில் செவிலியர் பற்றாக்குறை மேலும் தீவிரமாகலாம் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் உள்ளூர் அளவில் செவிலியர் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பை அதிகரிப்பதுடன், வெளிநாட்டு பணியாளர்களின் பங்களிப்பும் முக்கியமாகி வருகிறது. SDA