தென் கொரியாவில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சுவிஸ் நபருக்கு சிறை
தென் கொரியாவின் ஜேஜு தீவில் சுமார் மூன்று கிலோ மெத்தாம்பெட்டமைன் (Methamphetamine) போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில், 80 வயதுக்கு மேற்பட்ட சுவிஸ் நபருக்கு மூன்று வருடம் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, அமெரிக்க தொலைக்காட்சி தொடர் “Breaking Bad” இன் கதாபாத்திரமான வால்டர் வைட்டை ஒத்த நிகழ்வாக உள்ளூர் ஊடகங்களில் விவரிக்கப்படுகிறது. சுவிஸ் நாளிதழ் Blick திங்கட்கிழமை வெளியிட்ட தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர், ஜேஜு மாவட்ட நீதிமன்றத்தில், தாம் ஒரு மூன்றாம் நபரின் கோரிக்கைக்கு இணங்க கம்போடியாவின் பினோம் பெனிலிருந்து ஒரு பயணப்பையை அனுப்பியதாகவும், அதன் உள்ளே போதைப்பொருள் இருந்ததை அறியவில்லை என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவரின் வழக்கறிஞர் தெரிவித்ததாவது, சமூக ஊடகங்கள் வழியாக அவரை அணுகிய ஒருவர் “ஜப்பானிய வங்கியாளருக்கான பரிசுப் பொருளை அனுப்ப வேண்டும்” எனக் கூறி, அந்தப் பணியை நிறைவேற்றினால் 8.5 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்குவதாக வாக்குறுதி அளித்ததாகும்.

ஆனால் நீதிமன்றம், அந்த சுவிஸ் நபர் உண்மையில் போதைப்பொருள் இருப்பதை அறிந்தாரா என்பதில் உறுதியான ஆதாரங்கள் இல்லையென தெரிவித்தது. அதேசமயம், தீர்ப்பில், அவர் அந்தப் பணியை ஏற்றுக் கொண்ட விதத்தைப் பார்த்தால், போதைப்பொருள் எனத் தெரிந்திருந்தாலும் அதைச் செய்திருக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவருக்கு சாதகமாகக் கருதப்பட்ட காரணங்களில் ஒன்று, கைப்பற்றப்பட்ட மூன்று கிலோ மெத்தாம்பெட்டமைன் முழுமையாக பறிமுதல் செய்யப்பட்டு, சந்தைக்கு எட்டாதது என்பதாகும்.
சுவிஸ் வெளிநாட்டு விவகார துறை (DFAE) இந்த கைது சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது. சுவிஸ் வெளிநாட்டு விவகார துறை பேச்சாளர் கூறியதாவது, “சியோல் நகரிலுள்ள சுவிஸ் தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து, அந்த சுவிஸ் குடிமகனுக்கு தூதரக உதவி வழங்கி வருகிறது” என்பதாகும்.
தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு காரணங்களால் சுவிஸ் வெளிநாட்டு விவகார துறை மேலதிக விவரங்களை வெளியிடவில்லை.