தலைவருக்கு வீரவணக்கம்.! ஒருவர் கைது.! பிரான்ஸ், ஆஸ்திரேலியாவில் அடிதடி
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுக்கு வீரவணக்க நிகழ்வு ஒன்று சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் இடம்பெற்றுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் அவர்களின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காகவும் இறுதிவரை போராடி 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் நந்திக்கடலோரம் விடுதலைப்புலிகள் தலைவர் தனது இன்னுயிரை ஆகுதியாக்கினார்.
இதனை தொடர்ந்து அவர் உயிருடன் இருக்கிறார் இல்லை என பல சர்ச்சைகள் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது ஒரு குழுவினர் ஒன்று கூடிஅவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் சுவிட்ஸர்லாந்தில் வீரவணக்க நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வு ஏற்பாடுகள் ஆரம்பித்ததில் இருந்து தமிழர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் உருவாகிவந்தன. எனினும் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மேதகு நினைவெழுச்சி அகவம் என்கின்ற அமைப்பினர் மற்றும் குறிப்பிட்ட மக்களுடன் இணைந்து நினைவெழுச்சி நிகழ்வை நடத்தியுள்ளனர்.
இதன்போது பல புலம்பெயர் ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டு அவருக்கு மரியாதை செலுத்தினர். நிகழ்வின் போது மண்டபத்திற்கு வெளியில் சிலர் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட வேளையில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அதில் தலைவருக்கு அஞ்சலி செலுத்த கூடாது என குழப்பம் விளைவித்த ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை ஆஸ்திரேலியா பேர்த் நகரத்தில் இடம்பெற்ற தலைவருக்கான அஞ்சலி நிகழ்விலும் குழம்பம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டிருந்த நிலையில் ஒரு சிலர் போலீசாரின் பாதுகாப்புடன் விளக்கேற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இது மட்டுமின்றி பரீசில் இருந்து சுவிட்சர்லாந்திற்கு அஞ்சலி நிகழ்வுக்காக புறப்பட இருந்த பேரூந்து ஒன்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன் சிலர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பாக காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. தலைவரின் இறப்பு தொடர்பில் குறிப்பாக சுவிட்சர்லாந்தில் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் கருத்துக்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையிலும் பலர் தனித்தனி குழுக்களாக பிரிவுபட்டு இருக்கின்ற நிலையிலும் இந்நிகழ்வு பல்வேறு வாதங்களை தோற்றுவித்துள்ளது.

இதற்கு முன்னரும் தலைவருக்கு அஞ்சலி செய்வதான நிகழ்வு யெர்மனிலும் அதே போன்று கார்த்திக் மனோகரன் என்கின்ற மேதகுவின் சகோதரரின் பிள்ளையால் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒரு நாளில் இறந்தவருக்கு அதே நாளில் அஞ்சலி செலுத்துவதுதான் மரபு. விடுதலைப்புலிகளை பொறுத்தமட்டில் உயிர்நீத்த மாவீரர்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் ஒரு நாளாக கார்த்திகை 27 தலைவரால் உருவாக்கப்பட்டது. இது இப்படியிருக்க ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நாளில் அஞ்சலி செலுத்துவதானது கேலிக்கூத்தான ஒரு விடயமாக இருப்பதாக ஈழ ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது மாத்திரமின்றி தலைவர் இருக்கிறார் என்று ஒரு கும்பல் கதை சொல்லிக்கொண்டிருக்க தலைவர் வீரச்சாவு என்பவர்களுக்கிடையே பல கருத்துக்களை கொண்டவர்கள் உள்ளமை வேடிக்கையாவே உள்ளது.
தலைவர் மே17 அன்று வீரகாவியமானார் என்கின்ற விடயத்தை தலைவருடன் பயணித்த மூத்த போராளிகள் உட்பட இறுதிகளமுனையில் நின்ற முக்கிய போராளிகள் உறுதிப்படுத்தியிருந்தும் சிலர் மே18 என்னும் மே19 என்றும் முன்னுக்கு பின்னான முரண்பட்ட கருத்துக்களை பேசிக்கொண்டிருக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
ஈழத்தமிழர்களாகிய எம்மை அத்தனை நாடுகளும் சேர்ந்து ஏன் அழித்தது ஏன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எமது இனம் மீண்டெழுந்து விடக்கூடாததென எதிரிகள் மிகத்தெளிவான முறையில் வேலைத்திட்டங்களையும் காய் நகர்த்தி எமக்குள்ளையே அடிபட்டு எதிர்கால சந்ததிகளுக்கு சரியான வரலாற்றை கடத்தவிடாமல் தடுக்கும் முயற்சிகளாவே இது பார்க்கப்படுகிறது.
எனவே புலம்பெயர்வாழ் தமிழ் உறவுகள் ஆழமான சிந்தையுடன் ஒவ்வொரு அடியையும் நகர்த்தவேண்டிய காலத்தின் தேவை இப்போது உள்ளது என்பதே எஞ்சியிருக்கும் ‘உண்மையான போராளிகளின்’ மனக்குமுறலாக உள்ளது.
நேர்மையுடன் தீவகன்.